எனை முதன்முறை தூக்கிக் கொண்ட
செவிலியின் கை விரல் பற்றிய போதும்..
சேலை வேட்டித் தொட்டிலில் அயர்ந்த போதும்..
கழுத்தை கட்டி தந்தையை முத்தமிட்ட போதும்..
பிஞ்சுக் கையில் அன்னைக்கோர் வாய் ஊட்டியபோதும்..
பள்ளிச் செல்ல தமக்கை தலையை வாரி விட்டபோதும்..
துவண்டுபோகையில் தோழன் தோள் தட்டியபோதும்..
வருத்தத்தில் விழிநீரைத் தோழி துடைத்த போதும்..
பாவாடை சட்டை தாவணியான போதும்..
ஒற்றை சடை பின்னி பூக்கள் சூடியபோதும்..
உடல் சோர்ந்த மனைவிக்காய் சமைத்து
வீட்டுவேலையும் முடித்த கணவனைக் காணும் போதும்..
நடுநிசியானாலும் ஒன்றாய் உண்ணக் காத்திருக்கும்
மனைவியை பார்க்கும் போதும்..
புதிதாய் பூத்த பூவிலாடும் வண்டைக் கண்டபோதும்..
நதியில் பயணம் செய்யும் பூவையும்
காற்றில் மிதக்கும் சருகையும் ரசித்த போதும்..
இலையில் வாழ கொஞ்சமெண்ணிய மழைத்துளிகளை
கிளையுலுப்பி கட்டவிழ்த்து விட்ட போதும்..
அலையோசை போட்டிசொல்ல என்கொலுசோசை கேட்டு
தோற்று பின்சென்ற அலையை துரத்திய போதும்..
முகத்தில் விழும் கூந்தல் கீற்றை பின்னிழுத்து
காற்றை கிழித்து இருசக்கர வண்டியில் பறந்த போதும்..
தேநீர் கேட்ட முதியவளுக்கு உணவும் சேர்த்து
வாங்கிக்கொடுத்து நூறாண்டு வாழ ஆசிவாங்கிய போதும்..
நிலவைக் காட்டி கணவனுக்கு உணவூட்டிய போதும்..
இல்லாத உலகில் மழலைகளோடு லயித்த போதும்..
நதிக்கரையில் கால் நனைத்து அமர்ந்த போதும்..
மழைநனைந்த நாளில் அவன் தலை துவட்டிய போதும்..
ஒவ்வொரு நொடியும் கடக்க விரும்புகிறேன் காதலோடு..
ஆனாலும்
சொல்லும் சொல் கேட்கும் பதுமையாய்
அமிலத்திற்கும் காமத்திற்கும் விழும் பலிகளாய்
பிறந்தேன் பெண்ணாய் தானெனைப் பார்ப்பாயோ!
ரத்தம்சதை மட்டுமல்ல உள்ளம் உணர்வும்
உண்டென நீயும் என்று அறிவாயோ!
உணர்வாயோ உன் போலவே உலகில்
உணர்வுகளோடு உண்டெனக்கோர் மனமென..
காதல் கொள்ளாத இதயமில்லை - அதைக்
கொண்ட போது இதயமே கொள்ளவில்லை
என்றே அளவில்லாது கொண்டிருங்கள் நேசத்தை..
** இனிய காதல் தின நல்வாழ்த்துக்கள்.. **


