என் காதல் நாட்கள் (பாகம் 2) ~எழுத்து:
பிரவின்
முதல் பாகம் படிக்க.....
அன்பு அம்மா,
அப்பாவுக்கு,
உங்கள் கடிதம்
கிடைத்தது.. நான் இங்கு நலம். உங்கள் சுகமரிய ஆவல்.. நிறைய தெளிவும் மன நிறைவும்
கொண்டேன் உங்கள் கடிதத்தில்..
இத்தனை காதலோடு
நான் உருவானேன், பிறந்தேன் என்ற எண்ணமே எனக்குள் ஒரு துள்ளலை தருகிறது.. ஒரு மிக
அழகான காதல் கதை, நாவல் படித்தது போலிருந்தது உங்கள் கடிதம். பின்னொரு நாளில் என்
குழந்தைகளுக்கும் காட்டிக் கொள்ள பத்திரப்படுத்தி வைத்துவிட்டேன். கடிதத்தில்
குறிப்பிட்டுள்ள பாடல்களை எனது அலைபேசியில் தினம் கேட்கிறேன்..
உங்கள் காதலை
மேலும் அறிந்து கொள்ள மனம் ஏங்கிக் கொள்கிறது. நேரில் காதில் கேட்டால் இவ்வளவு
சுவை இருந்திருக்குமோ என்று தெரியவில்லை. ஆனால் இந்த கடித போக்குவரத்து இனிமையாய்
உள்ளது. இருவரும் காதல் காலங்களில் கடிதம் தான் எழுதிக் கொள்வீர்களோ?! வேறென்ன வித்தியாசங்கள்??
வேறேதும் உருகிக் கொண்ட தருணங்கள் உண்டா?! இருவரும் கோபம் கொண்டு, அதிர்ந்து
பேசிக் கூட நான் பார்த்ததில்லை?? கருத்துவேறுபாடு, விவாதங்கள் இருந்திருக்கிறது
என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எப்போது?? அந்த தருணங்களை எப்படிக் கடந்தீர்கள்?? மேலும்
எழுதுங்கள். ஆச்சரிய விழிகளோடு காத்திருக்கிறேன்.
கட்டியணைத்து
முத்தமிட, மடி சாய்ந்து தூங்கிக் கொள்ள, மாறி மாறி ஊட்டி விட ஏங்கிக் கொண்டு
உங்களை சந்திக்கும் நாள் எண்ணி காத்திருக்கிறேன்.
அன்பு
மகள்.....
அன்பு மகளுக்கு,
மீண்டுமாய் நானும்
உன் அம்மாவும் சேர்ந்தே எழுதிக் கொள்வது.. உன் கடிதம் கண்டோம். தொலைபேசியில்
அழைப்பு வரும் என்று காத்திருந்தவர்களுக்கு கடிதம் கண்டு ஓர் ஆச்சர்ய அதிர்ச்சி..
இன்பமான அதிர்ச்சி தான். இருவரும் நிறைய நலத்துடனும் காதலுடனும் இருக்கிறோம்.. நீ
நலமோடு வாழ தினம் இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..
வேறேதும் தருணங்கள் உண்டெனவா என கேட்கிறாய்.. வாழ்ந்த வாழும் ஒவ்வொரு நொடியும்
எங்களுக்குக் காதல் தருணங்கள் தான்.. எதை எழுதுவது..
நாங்கள் காதல்
திருமணம் செய்து கொண்டோம் என்று சொல்லும் பொழுதெல்லாம் பல நண்பர்களுடைய முதல்
கேள்வி யார் முதலில் காதலை சொன்னீர்கள் என்பது தான். உண்மையில் அது ஒரு
சுவாரசியமான சம்பவம்.. உன் அம்மாவின் வரிகளில் நீயும் தெரிந்து கொள்..
-----------------------------------------------------------------------------
ஒரே அலுவலகம்.
உணவு நேரம், தேனீர் நேரம் என ஒன்றாகவே செல்வோம்.. நல்ல நண்பர்களாய் ஒருவரை ஒருவர்
நன்கு அறிந்து வைத்திருந்தோம். இருவரின் நட்பு வட்டத்திற்கும் நாங்கள்
காதலிக்கிறோம் என்றே தெரிந்திருந்தது.. இருவருக்கும் கொஞ்சம் மரியாதை உண்டென்பதால்
யாரும் நேரிடையாக சொன்னதில்லை.. முதுகின் பின்னால் பேசிக் கொள்வார்களென அவ்வபோது
செவிவழிச்செய்தி வரும்.
அப்போதெல்லாம்
உண்மையில் எங்களுக்குள் காதல் இல்லை. அல்லது இல்லையென்று இருவருமே நம்பிக்
கொண்டிருந்தோம்.. எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு தான் வளர்ந்திருந்தது. எனக்கு நல்ல
இடத்தில் திருமணம் செய்ய வேண்டுமென அவனும், அவனுக்கொரு பெண்ணை நான் பார்த்து
திருமணம் செய்து வைப்பதாகவும் நிறைய நாட்கள் பேசியதுண்டு. இரண்டு ஜாதகங்கள் அப்பா
அனுப்பி வைத்த போது, உண்மையில் பொருந்தி போகிறதா என்றெல்லாம் கூகுளில் ஆராய்ச்சி
செய்து விவாதம் எல்லாம் செய்திருக்கிறோம். இருவருக்கும் ஜாதக பொருத்தங்களில்
நம்பிக்கை இல்லையென்றாலும், பெற்றோருக்காக பார்த்தது. வேறு காரணங்களுக்காக அவை
கூடி வரவில்லை என்றாலும் இவனுக்காகத் தான் அது நடக்கவில்லை என அப்போது
தெரியவில்லை. (திருமணமான பின்னால், நான் சொன்னது போல அந்த இருவருக்கும் நல்ல
ஜாதகம். பாரு, ரெண்டு பேரும் தப்பிச்சிட்டாங்க. நான் மாட்டிகிட்டேன், என்று அவன்
கூறும் போது தான் அது நினைவில் வந்த சிரித்திருக்கிறோம்..)
ஒரு மாலை நேரம்.
தேநீருக்குப் பின் சற்று நடந்து கொண்டிருந்தோம்.. நன்றாக நினைவில் இருக்கிறது.
சூரியன் கிட்டதிட்ட மறைந்துவிட்டான். அந்தி நேரம். எப்போதும் போல் கருப்பு நிற
சட்டையில் அவனும், கருப்பில் மஞ்சள், வெள்ளைப் பூக்கள் நிறைந்த சுடிதாரில் நான்..
அருகருகே அதுவரை பேசி களைத்தது போல அமைதியாய் நடந்து கொண்டிருந்தோம்.
“லவ்
பண்றியா?” என சட்டென கேட்டேன்.
அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை. இதே கேள்வியை ஒருவரை ஒருவர் நிறைய முறை கேட்டுக்
கொண்டுள்ளோம்.
“ஹா ஹா
ஹா.. ஆமா ஆமா.. நிறையவே..” எப்போதும் சொல்கின்ற அதே பதில். நீண்ட நாட்களாக ஒரு பெண்ணை
காதலிப்பதாகவும் நேரம் வரும் போது சொல்வதாகவும் சுற்றியுள்ளவர்களை ஏமாற்றிக்
கொண்டிருந்தான்.. என்னையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தான்..
“இப்ப
என்ன திடீர்னு???” கேட்டான்.
“சும்மா
தான். சொல்லிட்டியா??”
“என்ன சொல்லிட்டியா??”
“லவ்
பண்றேன்னு.. அந்த பொண்ணு கிட்ட?”
“ஹா ஹா ஹா..”
சிரித்து முடித்து ஒரு சின்ன இடைவெளி விட்டு தொடர்ந்தான்..
“சொன்னா
தான் காதலா என்ன.. ஒரு பொண்ண பார்த்து, பேசி, பழகி, புரிஞ்சிக்கிட்டு, அவங்கள
கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துகிட்டு ஒண்ணா வாழ்றது மட்டும் காதல் இல்லையே..
எங்கயோ தூரத்துல இருந்துட்டு அவ சந்தோஷமா சிரிச்ச முகத்தோட வாழ்றத கடைசி வர
சந்தோஷமா பாக்குறது கூட காதல் தான.. அது மட்டுமில்ல.. எனக்கு கொஞ்சம்.. இல்ல
இல்ல.. நிறையவே பயம்.. நாம ரொம்ப நேசிக்குற ஒருத்தர் நம்ம பக்கத்துல இருக்கும்
போது, அவங்க ஒரு சின்ன விஷயத்துல கஷ்டபட்டா கூட என்னால தாங்கிக்க முடியாது.. அம்மா
அப்பா சரி சொல்வாங்களா தெரியாது.. அவங்க கிட்ட இருந்து அவள கொண்டு வந்த, அவங்கள
கஷ்டபடுத்தி, அவளையும் கஷ்டப்படுத்தி.. இதெல்லாம் வேணாம்... அது மட்டுமில்ல.. ஒரு
வேளை அவளுக்கு விருப்பம் இல்லனா... ரெண்டு பேருக்கும் கஷ்டம்.. அழகா இருக்கு,
நமக்கு புடிச்சிருக்குனு ஒரு பூவ செடில இருந்து இருந்து பறிச்சு, அத வாட விடுறத
விட... அத செடிலையே விட்டு அழகு பாக்குற காதலே எனக்கு போதும்...”
நிதானமாக ஆனால்
மூச்சு விடாமல் பதில் சொன்னான்..
தலையை சற்று
தாழ்த்தி புருவத்தின் சற்று மேலே விரல்கள் படுமாறு தலையை தட்டிக் கொண்டேனாம்..
எனக்கு நினைவில்லை, அவனுக்கு அப்படித் தான் நினைவிருப்பதாக சொல்லி, அதை அவ்வபோது
செய்து காட்டுவான்.. இஸ்லாமிய பெண் சலாம் செய்வது போல் இருக்கும்...
“நிறைய
தமிழ் படம் பார்க்காதேனு சொன்னா கேக்குறியா..” நான்
சொன்னேன்...
சத்தமாய்
பதிலுக்கு சிரித்தான்..
“சரி
இப்படி யோசிக்கலாம்.. கல்யாணம் குழந்தை மட்டும் காதல் இல்லை தான்.. ஒருத்தர் வலியை
இன்னொருத்தர் தாங்கிக்குறது, சந்தோஷத்த பகிர்ந்துக்குறது, சின்ன சண்டைகள்,
சர்ப்ரைஸ் கிப்ட், செல்ல கோபம், சமாதானம், ஒண்ணா சமையல், ஒண்ணா மழைல நனையுறது,
ஒருத்தர ஒருத்தர் திட்டிக்கிட்டே தலைய துவட்டி விடறது.. இந்த மாதிரி இன்னும் நிறைய
அழகான தருணங்கள்.. அதெல்லாம் ஏன் மிஸ் பண்ணனும்.. எப்படியும் யாரோ ஒருத்தர
கல்யாணம் செஞ்சிக்க போறோம்.. நமக்கு புடிச்சவங்கள கல்யாணம் பண்ணுனா என்ன.. கண்டிப்பா
ஒருத்தரால ஒருத்தருக்கு கஷ்டம், மனவருத்தம் வர தான் செய்யும்.. ஆனா அதெல்லாம்
தாண்டி காதல் தான் பெருசுன்னு ஈகோ பாக்காம விட்டு கொடுத்து, மறுபடியும் சந்தோஷத்த
கொண்டு வந்த வாழ்ந்து காட்றது தான காதல் ஜெய்ச்சது காட்டும்..
அப்பறம்...
எல்லா அம்மா அப்பாக்கும் அவங்க குழந்தைங்க அவங்களுக்கு புடிச்சவங்கள
தேர்ந்தெடுத்தா வருத்தம் இருக்கத் தான் செய்யும்.. ஒரு குழந்தை பொறந்த சமாதானம்
ஆகிடுவாங்கனு எல்லாரும் சொல்வாங்க.. ஆனா அப்படி இல்ல.. அவங்க எப்ப சமாதானம் ஆவாங்க
தெரியுமா??” நான் நிறுத்தினேன்.. சொல்றதெல்லாம் கவனிக்கிறானா என்று தெரியும் ஆர்வம்
எனக்கு...
“எப்ப???” உடனே
கேள்வி வந்தது.. கவனித்திருக்கிறான்..
மெலிதான
புன்னகையோடு தொடர்ந்தேன்..
“நாம
பாத்திருந்தா கூட இப்படி ஒரு பையன் கெடச்சிருக்க மாட்டான்.. நம்ம விட நம்ம பொண்ண
நல்லா பார்துக்குறான்னு தெரிஞ்சிக்கும் போது தான்..”
“இப்ப
என்ன சொல்ல வர.. ஒண்ணும் புரியலையே..” கொஞ்சம்
அப்பாவித்தனமான குரலில் கேட்டான்..
“நாம
பாத்திருந்தா கூட இப்படி ஒரு பையன் கெடச்சிருக்க மாட்டான்னு எங்க அப்பா அம்மா
மட்டுமில்ல, இந்த ஊர் உலகத்துல இப்படி ஒரு ஜோடி இல்லன்னு சொல்ற அளவுக்கு நீ என்ன
பாத்துக்குவ, தாங்கிக்குவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. உனக்கு அந்த நம்பிக்கை
இல்லையேனு சொல்ல வரேன்.. அது புரியலையா??” கேட்டு விட்டு
அவனைப்பார்த்தேன்..
“ச்சே
ச்சே.. அப்படிலாம் இல்ல.. அதெல்லாம் நல்லா பார்த்துக்குவேன்...”
குனிந்த தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்த போது முகத்தில் ஆச்சரிய கோடுகள்
தெரிந்தது..
“ஹே.... அப்ப
உனக்கு ஓகே வா.....??” ஆள்காட்டி விரலை நீட்டிக் கேட்டான்..
“இது ரொம்ப
லேட்டு..” சிரித்துக்கொண்டே நடந்தோம்.. இன்றுவரை அதே சந்தோஷத்தோடு..
பெரிதாய்
சொல்லிகொள்ளுமளவு இல்லையென்றாலும் இப்படித்தான் தொடங்கியது எங்கள் காதல்
அத்தியாயம்..
காதலை முதலில்
சொன்னது நானென்றாலும் நான் நினைத்ததை விட என்னை அவன் அதிகமாய் நேசித்தது மெதுவாகத்
தான் தெரிந்தது.. அதை நான் தெரிந்து கொண்ட ஒரு தருணம்..
-----------------------------------------------------------------------------
காதலை வீட்டில்
சொல்லி திருமண தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்த நேரம்..
.....நானுனை
நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்..... அவனது அலைபேசி ஒலித்தது..
அலுவலகத்தில் இருந்தான்.. நான் விடுப்பு அன்று..
“சொல்லு
டா..” நான் தான் மறுமுனையில் என்று தெரியும்..
“அப்பா
கிட்ட பேசுனியா?? வீடு கேட்டியாம்.. பெருசா வரதட்சணைஎல்லாம் வாங்க மாட்டேன்..
கல்யாணம் பேச ஆரம்பிச்சதும் நா ஆம்பளனு புத்திய காட்டிட்ட இல்ல..”
கோபத்தில் கொஞ்சம் சத்தமாக தான் பேசினேன்..
“ரொம்ப
கோபமா இருக்க.. ஈவ்னிங் மீட் பண்ணலாம்.. பேசிக்கலாம்.. என் பக்கம் என்ன இருக்குனு
கேட்ப தான??” அவன் பொறுமையாகக் கேட்டான்..
“எங்க?”
இன்னும் கோபமாக கேட்டேன்..
“5 மணி.. வழக்கமா மீட் பண்ற காபி
ஷாப்..”
“சரி..” பதிலுக்காக காத்திருக்காமல்
அலைபேசியை அணைத்தேன்..
காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டான் என தெரியும்.. ஊரிலுள்ள வீட்டை என்
பெயரில் எழுதிக் கேட்டிருக்கிறான் அப்பாவிடம்.. திருமண செலவு முழுதும் அவன்
ஏற்றுக் கொள்வதாயும் சொல்லியிருக்கிறான்.. மாலை என்ன கதை சொல்கிறான் பார்ப்போம்
எனக் காத்திருந்தேன்..
மாலை வழக்கம் போல எனக்குமுன் வந்திருந்தான்.. இருவர் உட்காரும் அந்த டேபிளில்
சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தேன்..
“என்ன சாப்டுற?” கேட்டான்..
“ஏன் அப்படி கேட்டனு சொல்லு?? உன்
மேல எவ்ளோநம்பிக்கை வெச்சிருந்தேன்.. அப்பா அம்மா கிட்ட அவ்ளோ சொல்லிருந்தேன் உன்ன
பத்தி.. அவசரப்பட்டு முடிவு பண்ணிட்டோமோன்னு ஒரு நிமிஷம் என்னையும் யோசிக்க
வெச்சிட்ட இல்ல..” கொஞ்சம் கோபம் குறைந்திருந்தது எனக்கு..
“இத படி..” காகிதம் ஒன்றை நீட்டினான்..
திருமணத்திற்கு பிறகு குடியேற பிளாட் வாங்க போவதாய் சொல்லி இருந்தான்..
அலுவலகத்தில் இருந்து 20 அல்லது 30 நிமிட தூரத்தில் இருந்தது.. புக் செய்ததற்கான ரசீது.. ஆனால் ஆச்சரியம் அது
அப்பா, அம்மா பெயரில் இருந்தது தான்..
“புரியல இது.. 28 வருஷமா நாங்க இருக்குற வீடு.. ஊருல இருக்கு.. அது நமக்கு.. நாம வேலை
பார்த்து, வாழ போற இடத்துக்கு பக்கதுல அப்பா அம்மா பேர்ல வீடு.. இது என்ன
கொடுக்கல் வாங்கல்..? கல்யாணத்துக்கு அப்புறம் நிம்மதியா ஊர்ல பொழுத கழிக்கலாம்னு
இருக்குற அவங்க, இது நம்ம வீடு இல்லைங்கற நெனப்புல அங்க இருக்கனுமா?” கொஞ்சம்
கடுப்பாகி கேட்டேன்..
“இல்ல.. அப்பா,
அம்மா நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இங்க தான் இருக்க போறாங்க.. ஒரு பிளாக் தள்ளி
இன்னொரு பிளாட்ல நாம இருக்க போறோம்..”
சத்தியமா
ஒண்ணும் புரியல என்பது போல் பார்த்தேன்.. அவன் தொடர்ந்தான்..
“கல்யாணத்துக்கு
அப்புறம் பையன் வீட்டுக்கு பொண்ணு வந்துடணும்.. அப்பா அம்மாவை விட்டுட்டு...
இதெல்லாம் எவன் கண்டு பிடிச்சானு தெரியல.. படிப்பு, வேலைனு பையன்தான் அப்பா அம்மா
விட்டு தள்ளி இருப்பான்.. பொறந்ததுல இருந்து அப்பா அம்மா கூடவே இருக்குற பொண்ணு
கூட தான் அவங்க க்ளோஸ்ஆ இருப்பாங்க.. அவங்கள பிரிக்காம நியாயமா பையன் தான அவங்க
கூட போய் சேர்ந்து இருக்கணும்.. பிரிஞ்சு வந்துட்டா அது எவ்ளோ கஷ்டமா இருக்கும்..
தள்ளி வந்துட்டோம்னு நீயும் அவங்கள மிஸ் பண்ண கூடாது.. கல்யாணம் ஆகி போய்ட்டானு அவங்களும்
உன்ன மிஸ் பண்ண கூடாது...”
கொஞ்சம்
புரிந்தது..
“அதெல்லாம்
சரி.. அவங்கள நம்ம கூட வச்சிக்கலாம்.. அதுக்காக அந்த வீடு உனக்கு எதுக்கு.. ஊர்ல
அவங்களுக்கு இருக்குற ஒரே சொத்து அது தான..? அவங்க காலத்துக்கு அப்புறம் எனக்கும்
தங்கச்சிக்கும் பிரிச்சி குடுக்குறாங்க.. இல்ல தங்கச்சிக்கு குடுக்குறாங்க..நமக்கு
எதுக்கு?”
“நம்ம பேர்ல
இருந்தாலும் அது அவங்க வீடு தான்.. எப்ப வேணும்னாலும் போய்ட்டு வரட்டும்.. ஆனா
அவங்க பேர்ல அது இருந்தா, இங்க இருக்குற வரைக்கும் இது நம்ம வீடு இல்ல, நம்ம வீடு
ஊர்ல இருக்கு.. அங்க போய்டணும்னு தோணிகிட்டே இருக்கும்.. சின்ன கோபம், வருத்தம்
வந்தாலும் என் வீட்டுக்கு போறேன்னு தன் நினைக்க தோணும்.. இங்க இருக்குறது தான்
சொந்த வீடுனா இங்க தான இருந்தாகணும்.. அப்புறம் அந்த வீடு எனக்கு ஏன் வேணும்னா அது
நீ பொறந்து, வளர்ந்த வீடு.. சின்ன வயசுல நீ குளிச்ச இடம், ஓடி விளையாடின இடம்,
சுவத்துல வரைஞ்சகிறுக்கல், துணி மடிச்சி வச்ச அலமாரி, ரெட்டை ஜடை பின்னின கண்ணாடி,
முதல்ல சமையல் பண்ணின சமையற்கட்டு.. உன்ன பத்தி கதை சொல்ற நிறைய பொக்கிஷம் அங்க
தான இருக்கு.. அது வேணும் எனக்கு..
எப்ப
வேணும்னாலும், எவ்ளோ நாள் வேணும்னாலும் அப்பா அம்மா அங்க போய்ட்டு தங்கிட்டு
வரட்டும்.. அது நம்ம வீடுன்னு இருந்தா நாமளும் அப்பப்ப போவோம்... நீ படிச்ச
ஸ்கூல், சைக்கிள் பழகின தெரு, மிட்டாய் வாங்கி சாப்பிட்ட கடை, ஓடி விளையாண்ட திண்ணை,
சுத்தி வந்த கோவில் பிரகாரம் எல்லாம் எனக்கு காட்டி கதை சொல்லு..
பயப்படாதே..
வீட்டை எழுதி வாங்கிட்டு அப்பா, அம்மாவை அப்படியே விட்டுட மாட்டேன்.. அவங்க
எனக்கும் அப்பா அம்மா தான்..”
எனக்கு கொஞ்சம்
கண் கலங்கியது.. இருந்தாலும் சற்று கடுமையாக, “அது
சரி.. ஆனா இதெல்லாம் என்கிட்டே முன்னாடி ஏன் சொல்லல.. அப்ப எல்லாம் தனிய
முடிவெடுக்க ஆரம்பிச்சிட்ட.. என்ன மதிக்கல.. அப்படித் தான??” என்று
கேட்டேன்..
சமாதானம் ஆகி
விடுவேனென்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம்.. சற்று தாழ்ந்த குரலில், “அய்யோ
அப்படிலாம் இல்லை.. ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு ட்ரை பண்ணேன்.. நீ என்ன
இன்னும் கோபப்படுற.. நீ ரொம்ப நல்லவன்டா தான உன் டயலாக்... அத விட்டுட்டு வேற
சொல்ற...”
மெதுவாக
அவனிடம்.. “சண்டை போடறதுன்னு முடிவு பண்ணிட்டு தான் வீட்ல இருந்து வந்தேன்..
எதாவது ஒரு சண்டை போடனும்ல..” என்றேன்.. சிரித்தே விட்டான்..
சென்னையில்
எல்லாம் தங்க முடியாது என்று மறுத்த அப்பா அம்மாவை நாள் கணக்கில் சமாதானம் செய்து,
திருமணமான இரண்டே நாளில் நான் பிள்ளை உண்டாகி இருக்கிறேன் என பொய் சொல்லி அவர்களை
இங்கே அவன் அழைத்து வந்தது பெரும்கூத்து..
சின்ன சின்ன விஷயங்களில்
கூட பார்த்து பார்த்து செய்வது, எனக்கு எது சந்தோஷம் என அதை முதலில் யோசிப்பது,
இது தான் வாழ்கையில் பல தருணங்களை மறக்க முடியாததாய், காதல் நிறைந்ததாய் மாற்றி
விடுகிறது..
சாதாரண
தருணங்கள் கூட சிலமுறை அழகானதாய் மாறி விடுகிறது.. உண்மையில் காதலுக்குத் தான்
அந்த சக்தியுண்டு.. அது நம்மை சுற்றி நடக்கும் சாதாரண விஷயங்களைக் கூட அது
அழகானதாக மாற்றி விடுகிறது..
விடுமுறை நாளில்
சில நேரங்கள் வீட்டில் இருவரும் திரைப்படங்கள் பார்ப்பதுண்டு.. ஒரு நாள்
ரஜினிகாந்த், மீனா நடித்த எஜமான் என்ற திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.. அடிக்கடி
பார்க்கும் படங்களில் அதுவும் ஒன்று.. மீனாவிற்கு குழந்தை பிறக்கப் போவதில்லை என
ரஜினிக்கு தெரியும்.. ஒரு சீனில் பிறக்க போகும் குழந்தைக்கு பெயர் என்ன வைக்கலாம்
என மீனாவும், ரஜினியும் பேசிக் கொள்வார்கள்.. பெண் குழந்தை தான் பிறக்கும்
என்றும், அதற்கு வைத்தீஸ்வரி என தன் மனைவியின் பெயரை வைத்து, வாழ்நாள் முழுவதும்
அந்த பெயரை மட்டும் தான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று ரஜினி சொல்வதாய்
வரும்.
பின் ஆண்
குழந்தை என்றால், வானவராயன் என்ற தன் பெயரை வைக்க வேண்டும் என்றும், டேய் வானவராயா
என்று செல்லமாய் அதட்டி பெயர் சொல்லி கூப்பிடுவதை தான் ரசிக்க வேண்டும் என்றும்
மீனாவிடம் சொல்வது போலவும் வரும்.. அந்த காலத்தில், பெண்கள் தங்கள் கணவன்
பெயரைக்கூட யாரிடமும் சொல்லமாட்டார்கள்.. மனைவி அதை சொல்லக் கேட்டு கணவன் ரசிக்க
விரும்புவதாய் இருக்கும் அந்த காட்சி.. பின் மீனா வெட்கப்பட்டு அந்த இடத்தை விட்டு
நகர்ந்து விட, தனக்கு குழந்தை வரன் இல்லையென்பதை அறிந்த ரஜினி கண் கலங்குவார்...
அந்தக் காட்சி
வரும்போதெல்லாம் எங்கள் இருவருக்கும் கண் கலங்கும்.. ஒருவரையொருவர் மாற்றி கண்
துடைத்துக்கொண்டு, நானும் அப்படித் தான்.. உன் பெயரை மட்டும் தான் கேட்டுக் கொண்டே
இருக்க வேண்டும் என்பான்.. உன் பெயரின் ஒரு பாதியில் அப்படித் தான் என் பெயர்
சேர்ந்தது..
எனக்கு இன்னொரு
பழக்கம் உண்டு.. சில நேரம் டிவி பார்த்துக் கொண்டே சோபாவில் தூங்கிப்போவேன்.. அவன்
என்னைத் தூக்கிக்கொண்டு கட்டிலில் போட்டு, போர்த்தி விடுவது வழக்கம்.. சில நேரம்
வேண்டும் என்றே கண்களை மூடிக் கொண்டு தூங்குவதுபோல் நடிப்பதுண்டு, அவனை தூக்க
வைக்க வேண்டுமென்று.. சாதாரணமாக தூக்கச் சொன்னால், சாப்பாட்டை குறை, ரொம்ப குண்டா
இருக்க.. திடீர்னு வெய்ட் தூக்குனா எங்கயாவது புடிச்சிக்கும் என்று கிண்டல்
செய்வான்..
ஒரு நாள்
அப்படித் தான் நடித்துக் கொண்டிருந்தேன்.. டிவியில் கமலின் கண்மணி அன்போடு பாடல்
ஒலித்துக் கொண்டிருந்தது.. அதில் கமல் ரோஷினியை தூக்கிக் கொண்டு அபிராமியே
தாலாட்டும் சாமியே என்று பாடுவது போல் வரும்... அதே போல அபிராமியே என்று பாடிக்
கொண்டே தூக்கிக்கொண்டு போனான்.. நடிப்பதை மறந்து நான் சிரித்தே விட்டேன்.. ஒரு
நிமிடம் நின்றான்.. “இறக்கி விட்றாத பா.. ப்ளீஸ்...”
சோம்பல் குரலில் கெஞ்சிக் கேட்டேன்.. அப்ப நீ பாடு, நான் தூக்கிட்டு போறேன் என்று
சொல்லி, நான் பாட, கொஞ்சம் ஆடிக்கொண்டே தூக்கிப் போனது அழகான தருணம்..
காதலை சொல்வது, பிறந்த வீடு, ஊர், சினிமா எல்லாம் எல்லாருடைய வாழ்விலும் உள்ள
சாதாரண விஷயங்கள் தான்.. ஆனால் அதை அழகான, மகிழ்ச்சியான, வாழ்நாள் முழுதும்
நினைத்து சிலாகிக்குமாறு தருணங்களாய் மாற்றி விடுதல் தான் அழகு.. அத்தகைய
தருணங்களை உருவாக்க மெனக்கெடுதல் தான் காதலில் வாழ்வது என்பது..
ஓர் சராசரி ஆணாய் பெண்ணாய் கணவன் மனைவியாய் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்..
ஆனால் சராசரியையும் சாதாரணத்தையும் அழகியனவாய் மாற்றி வாழும் போது தான் அதை
வாழ்தல் என சொல்லுவோம்.. இருப்பதற்கும் வாழ்வதற்கும் உள்ள வித்தியாசம் அது..
இன்னும் பல தருணங்கள் உண்டு.. அவையெல்லாம் உன் மடல் கண்டு.. எங்களின் இருவரின்
அன்பும், காதலும், ஆசீர்வாதங்களும் உனக்கு என்றும் உண்டு..
அன்புடன், அப்பா & அம்மா..
