Sunday, September 16, 2018

என் காதல் நாட்கள் (பாகம் 3) ~எழுத்து: பிரவின்


முதல் பாகம் படிக்க.....
இரண்டாம் பாகம் படிக்க.....
அன்பு அம்மா, அப்பாவுக்கு,
நலம்.. இருவரின் நலமரிய ஆவல்..                                      
மீண்டுமொரு அழகான காதல் கதை முந்தய கடிதம். பின்னொரு நாளில் என் குழந்தைகளுக்கும் காட்டிக் கொள்ள இதையும் பத்திரப்படுத்தி வைத்துவிட்டேன். வாழ்கையின் பல தேடல்களுக்கு விடைகளை அறிந்து கொள்கிறேன்.. வாழ்க்கை இவ்வளவு ருசியானது என்று தெரிந்து கொள்கிறேன்.. மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்..
காதல் சொல்லும் போது படபடப்பு.. சொன்ன பின்பு நிதானம்.. அம்மா மட்டுமில்ல, அவங்கள சுத்தி உள்ளவங்க மேல அப்பா வச்சிருந்த பாசம்.. நிறைய தெரிந்து கொண்டேன்.. இப்படி நம்ம லைஃப் இருக்க கூடாதான்னு ஏங்கவைக்குற அளவு காதல்.. நிச்சயம் நீங்க சொல்ற மாதிரி வாழ்க்கைன்றது நாம வாழ்றத பொறுத்தது தான்..
சந்திக்கும் நாள் எண்ணி காத்திருக்கிறேன்.
அன்பு மகள்.....

அன்பு மகளுக்கு,
மீண்டுமாய் நானும் உன் அம்மாவும் சேர்ந்தே எழுதிக் கொள்வது.. இங்கு நன்கு நலமாய் உள்ளோம்.. உன்னை தான் ரொம்ப மிஸ் பண்றோம்.. விரைவில் சந்திப்போம்..

இந்த கடிதங்கள் எங்களுக்கு எங்கள் நல்ல நாட்களை நினைவு படுத்தி செல்கின்றன.. இப்படி எல்லாம் பேசினோம், வாழ்ந்தோம் என்று பல நல்ல விஷயங்களை வாழ்க்கைக்கு கற்றுத் தருகின்றன.. அது இன்னும் எங்களுக்குள் காதலை தினம் தினம் அதிகப் படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது..

எங்கள் காதல் நாட்களில் நாங்கள் நிறையவே பேசிக் கொள்வோம்.. பல நேரங்களில் விவாதிப்போம்.. நிறையவே முற்போக்கு விஷயங்கள் என சொல்லலாம்.. சில விஷயங்கள் யோசித்துப் பார்த்தால் சரியென்று தோன்றும்.. சில தவறென்று தோன்றும்.. எங்களுக்குள் அது எப்போதும் பரஸ்பரம் ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ள உதவியது.. அவள் அப்படித்தான், அப்படித்தான் யோசிப்பாள், அப்படித் தான் பேசுவாள் என்று நானோ, இல்லை நான் இப்படித்தான், இப்படித்தான் யோசிப்பேன், இப்படித் தான் பேசுவேன் என்று அவளோ ஒரு நாளும் ஒருவரையொருவர் ஜட்ஜ் பண்ணியதே இல்லை.. மனதில் ஏதேனும் உறுத்திக் கொண்டிருந்தால் மீண்டும் பேசிக் கொள்வோம்.. மனம் விட்டுப் பேசிக் கொள்ள தயங்கியதே இல்லை..

அப்படி பேசிக்கொண்ட சில விஷயங்களை இந்த கடிதத்தில் பகிர்ந்து கொள்கிறோம்.. புரிந்துகொள்ள முயற்சி செய்.. புரியாவிட்டால் பரவாயில்லை.. வாழ்க்கை மெதுவாக புரிய வைக்கும்..

-----------------------------------------------------------------------------
வழக்கம் போல ஒரு மாலை நேரம்.. பேசிக்கொண்டிருந்தோம்..

அவள் தொடங்கினாள்..

"இப்ப நா உன் லைஃப்ல இல்லன்னு வச்சிக்குவோம்.. வயசாகிட்டே போகுது.. பேசாம அப்பா அம்மா பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாம்ல.. அவங்களுக்கும் பேரக் குழந்தைகளை பார்க்கணும், வளர்க்கனும்னு ஆசை இருக்கும்ல.. "

"நிச்சயம் இருக்கும்.. பண்ணிக்குவேன்.. ஆனா அதுக்காக வயசாகிடுச்சு, ஊர்ல எல்லாம் என்ன பேசிக்குவாங்கனு எல்லாம் யோசிச்சு பண்ணிக்க முடியாது.. என் மனசுக்கு எப்போ புடிக்குதோ அப்ப தான பண்ணிக்க முடியும்.. "

"அப்ப பெத்தவங்க சந்தோஷம் முக்கியம் இல்லையா? அவங்க நமக்கு நல்லது தான பண்ணுவாங்க.. "

"ஆமா.. ஆனா இது அடுத்து வாழபோற 30-40 வருஷ வாழக்கை.. டக்குனு எப்படி முடிவு பண்றது? அந்த பொண்ணுக்கு என்ன புடிக்கும்.. என்ன வேணும்னு தெரிஞ்சிக்கணும்.. கல்யாணம் பண்ணிக்கிட்டு அதுக்கப்றம் தெரிஞ்சிகிட்டு எல்லாத்தையும் விட்டுக்கொடுத்து வாழ்றது கஷ்டம்.. "

"கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் எப்படி தெரிஞ்சிக்குவ?? கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் விட்டுக் கொடுக்க மாட்டியா?? கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பொண்ண நிறைய காதலிக்கலாம்.. நிறைய விட்டுக் கொடுக்கலாம்ல. "

"பண்ணலாம் தான்.. ஆனா ஒரு சில சின்ன விஷயங்கள், கொஞ்சமாவது அந்த பொண்ணோட விருப்பம், வெறுப்பு எல்லாம் தெரிஞ்சிக்கணும்.. ஒரு வேளை அந்த பொண்ணு அவ பொறந்த ஊர்லையே வாழணும் நினைக்கலாம்.. நா வெளிநாடு போகணும் நினைக்கலாம்.. எனக்காக விட்டுக் கொடுத்துட்டு வரலாம்.. இல்ல நா என்னோட விருப்பத்த விட்டுக்கொடுத்துட்டு வரலாம்.. கல்யாணத்துக்கு அப்புறம்னா கண்டிப்பா விட்டுக் கொடுத்து தான் ஆகணும்னு விட்டுக்கொடுக்கணும்.. கல்யாணத்துக்கு முன்னாடினா விட்டுக் கொடுக்க வேண்டாமல.. அவங்க அவங்க விருப்பபடி வாழக்கை இருக்கலாம்ல.. "

"விட்டுக் கொடுக்குறது தப்புன்னு சொல்றியா?? கல்யாணத்துக்கு முன்னாடினா என்ன பின்னாடினா என்ன.. விட்டுக் கொடுக்குறதும் அன்பு தான.. அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் எனக்காக ஏதாவது ஒரு விஷயம் விட்டுக் கொடுக்கணும்னா இப்படித் தான் யோசிப்பியா?? "

"ஐயோ.. நிச்சயமா அப்படி இல்ல... கண்டிப்பா விட்டுக் கொடுப்பேன்.. நான் சொல்ல வர்றது உனக்கு புரியல.. இப்ப நீ ஊர் பக்கம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகணும், அம்மா அப்பாவ பக்கத்துல இருந்து பார்த்துக்கணும்னு நினைக்குறனு வச்சிக்குவோம்.. அம்மா, அப்பா என்ன கல்யாணம் பண்ணி வைக்குறாங்க, நா கல்யாணத்துக்கு அப்புறம் வேற இடத்துக்கு உன்ன கூட்டிட்டு போய்டறேன்.. எனக்காக உன் ஆசையை விட்டுட்டு வந்துடுற..

ஆனா என்னைக்காவது ஒரு நாள்.. நீ தனியா இருக்கும் போது.. நமக்குள்ள சண்டை வரும் போது.. எதோ ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது.. குழந்தைங்க ஒவ்வொரு நாளும் வளரும் போது, குறும்பு செய்யும் போது, ஒவ்வொரு வார்த்தை பேசும் போது.. நீ சின்ன வயசுல இத விட அதிகமா பண்ணுன, இதெல்லாம் பண்ணுனனு சொல்றதுக்கு அம்மா பக்கத்துலஇல்லாத போது... தோணும்... கண்டிப்பா தோணும்.. நம்ம அப்பா, அம்மா பக்கதுல இல்லையே.. நம்ம நண்பர்கள் கூட இல்லையே.. ஊர்ல இருந்த இத எப்படி பண்ணிருக்கலாம்.. ஒரு வேளை நீ எதிர்பார்த்த அளவு நா இல்லாம போகும் போது, இவனுக்காக எவ்ளோ விட்டுக் கொடுத்தோம்.. இந்த வாழக்கை இப்படி இருக்குனு தோணும்... எனக்கும் அப்படித் தான்.. இவளோ விஷயம் விட்டுக் கொடுத்து வாழ்க்கை இப்படி இருக்கேனு சலிச்சிக்க தான் தோணும்.. அப்புறம் வாழக்கை முழுசும் ஒரு சகிப்போட தான் வாழணும்.. "

"இங்க எல்லாம் அப்படித் தான.. கிடச்ச வாழ்கைய ஏத்துகிட்டு, சகிச்சிகிட்டு வாழந்தா சந்தோசமா இருக்க முடியாதா என்ன??? "

"இருக்கலாம்.. அந்த அளவுக்கு அந்த வாழ்க்கை வொர்த்’ஆ இருக்கமா சொல்லு?? நம்ம வாழ்கைய நாம நெனச்ச மாதிரி அமைசிக்க முடியும்னு இருக்கும் போது எதுக்காக அத அமைசிக்க முயற்சி பண்ணக் கூடாது?? எல்லா விஷயத்தையும் மாத்திக்கணும், விட்டுக்கொடுக்கணுமனு இல்ல.. அப்படி மாத்திகிட்டு, விட்டுக் கொடுத்துட்டு, நாம நாமளா வாழாம வேற ஒருத்தரா ஏன் வாழணும்??? நீ அப்படிங்கறது ஒரு நிஜம்.. ஒரிஜினல்.. அது தான் எனக்கு வேணும்.. உனக்கு புடிச்ச விஷயம்.. உனக்கு புடிச்ச இடம்.. உனக்கு புடிச்ச வேலை.. உனக்கு புடிச்ச நண்பர்கள், உனக்கு புடிச்ச உறவுகள், அம்மா அப்பா மாதிரி, உன்ன சுத்தி இருக்குற மாதிரி... உனக்கு புடிச்ச விஷயங்கள நீ செய்யனும்.. அது தான் எனக்கு வேணும்.. எனக்கு சமைச்சி போடறதுக்கும், சம்பாதிச்சி கொடுக்குறதுக்கும், என்னை நல்லா பார்த்துக்கணும்னு கல்யாணம் பண்ணிக்க முடியாது.. நீ நீயா இருக்கணும்.. உனக்கு உன்னையே புடிக்கணும்.. உனக்கு புடிச்ச விஷயங்கள நீ தைரியமா பண்ணனும்.. ஒரு சக தோழியா என் வாழக்கை பயணத்துல கூட வர்ற ஒருத்தர் தான் எனக்கு வேணும்.. கனவுகளை, ஆசைகளை, விருப்பங்களை எல்லாம் புதைச்சிட்டு, எனக்காக விட்டுக் கொடுத்துட்டு நீ என்னோட வாழ்றதுல எனக்கு விருப்பம் இல்ல.."

"அப்ப உனக்காக எதையும் விட்டுக் கொடுக்க கூடாது.. நீயும் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டனு சொல்றியா??? "



"அப்படி இல்ல.. இவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம்.. இவளுக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம்னு தோணுற ஒரு கட்டம் வரும்.. அப்ப நமக்கே தெரியாம நாம ஒருத்தருக்கொருத்தர் நிறைய விட்டுக் கொடுப்போம்.. அது நிச்சயமா பின்னாடி ஒரு நாள், இதெல்லாம் விட்டுக் கொடுத்தோமேனு உறுத்துற அளவுக்கு இருக்காது.. அது தான் - வேற வழி இல்ல விட்டுக் கொடுப்போம்னு விட்டுக் கொடுக்குறதுக்கும், உனக்காக தான விட்டுக் கொடுக்கிறேன், இது இல்லைனாலும் நீ இருக்குறனு விட்டுக் கொடுக்குறதுக்கும் உள்ள வித்தியாசம்.. வாழ்க்கை நல்லா இருக்கும்.. "

"சத்தியமா புரியல.. இப்படி இருந்த நாம யாரையும் கல்யாணம் பண்ண முடியாது.. அதும் பொண்ணா பொறந்தா கண்டிப்பா பொறந்த வீடு, பெத்தவங்க, ஊரு, நண்பர்கள், வேலை, சுதந்திரம், ஆசை, விருப்பு, எல்லாத்தையும் கொஞ்சமாவது விட்டுக் கொடுத்து தான் ஆகணும்.. "

"கரெக்ட் தான்.. அதுக்கப்றம் ஏல்லாத்தையும் விட்டுக் கொடுத்துட்டு, ஊருக்காக, அம்மா அப்பாக்காக சந்தோசமா இருக்குற மாதிரி நடிக்கணும்.. அப்புறம் குழந்தைகளுக்காக.. நாம நமக்காகனு எப்ப தான் வாழ்வோம் சொல்லு.. இத சொன்னா என்ன நினைப்பாளோ, நினைப்பானோனு பயப்படனும்.. செய்யுற ஒவ்வொரு விஷயத்துக்கும் பெர்மிசன் கேக்கணும்.. இந்த ட்ரெஸ் போட்டா என்ன சொல்வானோனு யோசிக்கணும்.. ஒரு பையன ஃபிரெண்ட்னு சொன்னா அவன் என்ன நினைப்பானோ அல்லது பொண்ண ஃபிரெண்ட்னு சொன்னா அவள் என்ன நினைப்பாளோனு யோசிக்கணும், வீட்டுக்கு கூப்பிட இல்ல அவங்க வீட்டுக்கு நாம போறதுக்கு யோசிக்கணும், நிறைய சந்தோஷமான தருணங்களை மிஸ் பண்ணனும்.. இதெல்லாம் வேண்டாம் சொல்றேன்.. உனக்கு என்ன புடிக்குமோ அதையே எப்பவும் பண்ணனும், பேசணும் - யோசிக்காம.. நீ நீயா இருக்கறது தான் அழகு.. உனக்கு புடிச்ச மாதிரி நீ வாழ்றது தான் அழகு.. "

"நீ ஏன் இவளோ யோசிக்குறனு தெரியல.. பட் நல்ல விஷயம் தான்.. பசங்க ஒரு பொண்ணுக்காக இவளோ யோசிப்பாங்களானு எனக்கு தெரியல.. "

"ஹா ஹா ஹா ... மத்தவங்கள பத்தி எனக்கு தெரியல.. ஆனா நா யோசிப்பேன்.. "

"எல்லாரும் சொல்ற மாதிரி உன்ன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கொடுத்து வச்சவ தான்.. "

"காதலுக்கு கண் இல்லைன்னு ஏன் சொல்றங்கனு இப்ப புரியுதா??... "

"அது சரி....... அந்த டாபிக் விடு.. இது சொல்லு... ஒருவேளை உன்னை காதலிச்சிட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன பண்ணுவ?"

"ஏன் இப்படி கேக்குற? அப்படி ஒரு நிலைமை வராது.. "

"வந்தா என்ன பண்ணுவ? எங்க வீட்ல யாருமே ஒத்துக்கல.. யாருக்கும் புடிக்கல.. நானும் வீட்ல பாக்குற பையனுக்கு ஓ.கே சொல்லிட்டேன்.. என்ன பண்ணுவ?"

"ஒண்ணும் பண்ண மாட்டேன்.."

"கோபப்பட மாட்டியா? ஏன் என்ன விட்டுப் போறன்னு சண்டபோட மாட்டியா? அவ்ளோ ஈஸியா என்ன விட்டுக் குடுத்துடுவியா?"

"ஹா.. ஹா.. ஹா.. என்ன விட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணனும்னு உனக்கு தோணுச்சுனாலே நீ என்னை விட்டுக் குடுத்துட்டன்னு தான அர்த்தம்.. ஏதோ ஒரு பெரிய பிரச்சனை, சூழ்நிலைன்னு வேற ஒரு சாய்ஸ் வந்தாலும், அதையும் தாண்டி இவன் தான் நமக்கு லைஃப்னு தோணனும்.. அப்படி தோணலன்னா நான் அந்த அளவுக்கு நடந்துக்கலன்னு தான அர்த்தம்.. அப்போ என் மேல தான தப்பு.. இந்த உலகமே எதிரா வந்தாலும் இவன் கூட வாழுற வாழ்க்கையை மிஸ் பண்ண கூடாதுன்னு உனக்கு தோணுற அளவுக்கு நான் இருந்துருக்கனும்.."

"அதுக்காக வேற ஒருத்தர் கூட என்னை வச்சு எப்படி உன்னால பார்க்க முடியும்... எப்படி ஏத்துக்குவ?"

"ஏதோ ஒரு வகைல அது உனக்கு சந்தோஷத்த குடுத்தா கண்டிப்பா ஏத்துக்குவேன்.. லவ் பண்ணும் போது உன் சந்தோஷம் தான் எனக்கு எல்லாம்ன்னு சொல்லிட்டு.... இது தான் எனக்கு சந்தோஷம், என் வீட்ல எல்லாருக்கும் சந்தோஷம்ன்னு நீ வந்து நிக்கும் போது அத ஏத்துக்கலன்னா, நான் சொன்னது எல்லாம் பொய் ஆகிடாது? எப்பவுமே உன் மனசுக்கு எது சந்தோஷமோ, அத நீ செஞ்சா அது எனக்கும் சந்தோஷம் தான்.."

"இப்போ இப்படி சொல்லுவ... விட்டுப் போனப்புறம் எல்லா பொண்ணுகளும் இப்படித் தான்னு திட்டுவ.. யாரு கேட்டாலும் நான் ஏமாத்திட்டு போய்ட்டேன்னு தான சொல்லுவ.. இல்ல நம்மள பத்தி ஊரெல்லாம் சொல்லி என்னை அசிங்கப் படுத்துவேன்னு மிரட்டுவ.."

"கண்டிப்பா இல்ல.. அப்படி பண்ணுனா நான் உன்ன புரிஞ்சுக்கலன்னு அர்த்தம்.. சேர்ந்து எடுத்த போட்டோ நெட்ல போடுவேன், லவ் பண்ணுனப்ப அனுப்புன மெசேஜ் எல்லாருக்கும் அனுப்புவேன், முகத்துல ஆசிட் ஊத்துவேன், இதெல்லாம் பண்ணுற ஆள் நான் இல்லை... அப்படி பண்ணனும்னு யோசிச்சாலே நான் உன்னை லவ் பண்ணலன்னு அர்த்தம்.. உன்னை மிரட்டி, அசிங்கப்படுத்தி என்னை காதலிக்க வைக்க எப்படி முடியும்? ஒரு நாளும் கட்டாயப்படுத்தி யாருக்கும் காதல் வராது..."

"சரி நீ நல்லவன் தான்... மிரட்ட மாட்ட.. அப்ப லவ் ஃபெயிலியர் சொல்லிட்டு, தாடி வச்சுட்டு, சோகப்பாட்டு கேட்டுட்டு சுத்துவியா?"

"நான் ஏன் அப்படி சுத்த போறேன்.. எனக்கு புடிச்சவங்களோட சந்தோஷத்துக்காக நான் ஒரு விஷயம் பண்றேன்.. அது எப்படி ஃபெயிலியர் ஆகும்..  இப்படி வச்சிக்குவோம்.. நாம கல்யாணம் பண்ணிக்குறோம், ஆனா தினமும் உன்ன கஷ்டபடுத்துறேன்னு வச்சிக்குவோம்.. அத சக்சஸ்ன்னு சொல்ல முடியுமா??? என் மனசுல உன் மேல உள்ள காதல் கொஞ்சம் கூட குறையாத வரைக்கும் என் காதல் தோற்றுப் போச்சுன்னு சொல்ல முடியாது... அது நாம கல்யாணம் பண்ணிகிட்டாலும், பண்ணிக்கலனாலும் பொருந்தும்.. ஒரு பழமொழி உண்டு தெரியுமா.. காதலர்கள் தான் தோற்கிறார்கள்; காதல் தோற்பதே இல்ல..."

"சரி.. நான் உன்ன அவ்ளோ வொர்த் இல்லைன்னு விட்டு குடுத்துறேன்.. நீயும் என்ன விட்டு கொடுக்கற.. கூட சேர்ந்து வாழ்ற அளவுக்கு நா வொர்த் இல்லன்னு தான?? நா அந்த அளவுக்கு இல்லையா டா உனக்கு?? விட்டு போற அளவுக்கு தான் இருக்கேனா?"

"உன்ன விட்டுட்டு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணுனா தான அப்படி அர்த்தம்.. என் மனசுல உள்ள காதலும் மாற போறதில்ல.. நீயும் என் மனச விட்டு போக போறதில்ல.."

"அய்யா சாமி.. உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது... ஆனா என்னால அப்படி எல்லாம் முடியாது ப்பா..  வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறேன், என் சந்தோஷத்த உன் சந்தோஷம்ன்னு நெனச்சிக்கோ, அப்படி இப்படின்னு என்கிட்டே வந்துடாத... அந்த மாதிரி ஒரு நெனப்பு கூட வர கூடாது உனக்கு..."

"ஹா.. ஹா... ஹா.. உன்ன விட பெஸ்ட் எனக்கு வேற யாரு இல்ல.. பெஸ்ட்டா என் கண்ணுக்கு யாரும் தெரிய போறதும் இல்ல....."

-----------------------------------------------------------------------------

இன்று வரை இருவருக்கும் ஒருவர் ஒருவர் தான் பெஸ்ட்.. நான் நானாகவும் அவள் அவளாகவும் இருக்கிறோம்.. எனக்கு பிடித்ததென்று ஒரு உடை வாங்கி வரும் போது அவளுக்கு பிடிக்கவில்லை என்று அணிய மறுக்கும் போது, சரியென்று அதை ஏற்றுக் கொள்ளும் போது, எனக்குப் பிடிக்காத உணவென்றாலும் அவளுக்கு பிடிக்குமென்று அதை சமைத்து இருவரும் உண்பது, இவையெல்லாம் விட்டுக் கொடுத்தல் அல்ல, இருவருக்கும் உள்ள புரிதல் என்பதை அறிந்து கொண்டோம்.. லெட் ஹிம் ஹேவ் ஹிஸ் ஸ்பெஸ், லெட் ஹெர் ஹேவ் ஹெர் ஸ்பெஸ் என்று கொஞ்சம் இருவருக்கும் ஒரு இடம் கொடுத்துக் கொண்டோம்.. ஒவ்வொரு நாளும் உணர்ந்தும் கொள்கிறோம்.. இட் இஸ் வொர்த் இட் என்று..

இந்த முறை உனக்கு அறிவுரையும் அது தான்.. ஒருவருக்கொருவர் இடம் கொடுங்கள்.. நீ நீயாக இருக்கவும், அவள்/அவன் அவளாக/அவனாக இருக்கவும்..

மற்றவை அடுத்த மடலில்..

அன்புடன், அப்பா & அம்மா..


Monday, July 16, 2018

என் காதல் நாட்கள் (பாகம் 2) ~எழுத்து: பிரவின்

என் காதல் நாட்கள் (பாகம் 2) ~எழுத்து: பிரவின்


முதல் பாகம் படிக்க.....


அன்பு அம்மா, அப்பாவுக்கு,
உங்கள் கடிதம் கிடைத்தது.. நான் இங்கு நலம். உங்கள் சுகமரிய ஆவல்.. நிறைய தெளிவும் மன நிறைவும் கொண்டேன் உங்கள் கடிதத்தில்..
இத்தனை காதலோடு நான் உருவானேன், பிறந்தேன் என்ற எண்ணமே எனக்குள் ஒரு துள்ளலை தருகிறது.. ஒரு மிக அழகான காதல் கதை, நாவல் படித்தது போலிருந்தது உங்கள் கடிதம். பின்னொரு நாளில் என் குழந்தைகளுக்கும் காட்டிக் கொள்ள பத்திரப்படுத்தி வைத்துவிட்டேன். கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பாடல்களை எனது அலைபேசியில் தினம் கேட்கிறேன்..
உங்கள் காதலை மேலும் அறிந்து கொள்ள மனம் ஏங்கிக் கொள்கிறது. நேரில் காதில் கேட்டால் இவ்வளவு சுவை இருந்திருக்குமோ என்று தெரியவில்லை. ஆனால் இந்த கடித போக்குவரத்து இனிமையாய் உள்ளது. இருவரும் காதல் காலங்களில் கடிதம் தான் எழுதிக் கொள்வீர்களோ?! வேறென்ன வித்தியாசங்கள்?? வேறேதும் உருகிக் கொண்ட தருணங்கள் உண்டா?! இருவரும் கோபம் கொண்டு, அதிர்ந்து பேசிக் கூட நான் பார்த்ததில்லை?? கருத்துவேறுபாடு, விவாதங்கள் இருந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எப்போது?? அந்த தருணங்களை எப்படிக் கடந்தீர்கள்?? மேலும் எழுதுங்கள். ஆச்சரிய விழிகளோடு காத்திருக்கிறேன்.
கட்டியணைத்து முத்தமிட, மடி சாய்ந்து தூங்கிக் கொள்ள, மாறி மாறி ஊட்டி விட ஏங்கிக் கொண்டு உங்களை சந்திக்கும் நாள் எண்ணி காத்திருக்கிறேன்.
அன்பு மகள்.....

அன்பு மகளுக்கு,
மீண்டுமாய் நானும் உன் அம்மாவும் சேர்ந்தே எழுதிக் கொள்வது.. உன் கடிதம் கண்டோம். தொலைபேசியில் அழைப்பு வரும் என்று காத்திருந்தவர்களுக்கு கடிதம் கண்டு ஓர் ஆச்சர்ய அதிர்ச்சி.. இன்பமான அதிர்ச்சி தான். இருவரும் நிறைய நலத்துடனும் காதலுடனும் இருக்கிறோம்.. நீ நலமோடு வாழ தினம் இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..
வேறேதும் தருணங்கள் உண்டெனவா என கேட்கிறாய்.. வாழ்ந்த வாழும் ஒவ்வொரு நொடியும் எங்களுக்குக் காதல் தருணங்கள் தான்.. எதை எழுதுவது..
நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம் என்று சொல்லும் பொழுதெல்லாம் பல நண்பர்களுடைய முதல் கேள்வி யார் முதலில் காதலை சொன்னீர்கள் என்பது தான். உண்மையில் அது ஒரு சுவாரசியமான சம்பவம்.. உன் அம்மாவின் வரிகளில் நீயும் தெரிந்து கொள்..
-----------------------------------------------------------------------------
ஒரே அலுவலகம். உணவு நேரம், தேனீர் நேரம் என ஒன்றாகவே செல்வோம்.. நல்ல நண்பர்களாய் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து வைத்திருந்தோம். இருவரின் நட்பு வட்டத்திற்கும் நாங்கள் காதலிக்கிறோம் என்றே தெரிந்திருந்தது.. இருவருக்கும் கொஞ்சம் மரியாதை உண்டென்பதால் யாரும் நேரிடையாக சொன்னதில்லை.. முதுகின் பின்னால் பேசிக் கொள்வார்களென அவ்வபோது செவிவழிச்செய்தி வரும்.
அப்போதெல்லாம் உண்மையில் எங்களுக்குள் காதல் இல்லை. அல்லது இல்லையென்று இருவருமே நம்பிக் கொண்டிருந்தோம்.. எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு தான் வளர்ந்திருந்தது. எனக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்ய வேண்டுமென அவனும், அவனுக்கொரு பெண்ணை நான் பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும் நிறைய நாட்கள் பேசியதுண்டு. இரண்டு ஜாதகங்கள் அப்பா அனுப்பி வைத்த போது, உண்மையில் பொருந்தி போகிறதா என்றெல்லாம் கூகுளில் ஆராய்ச்சி செய்து விவாதம் எல்லாம் செய்திருக்கிறோம். இருவருக்கும் ஜாதக பொருத்தங்களில் நம்பிக்கை இல்லையென்றாலும், பெற்றோருக்காக பார்த்தது. வேறு காரணங்களுக்காக அவை கூடி வரவில்லை என்றாலும் இவனுக்காகத் தான் அது நடக்கவில்லை என அப்போது தெரியவில்லை. (திருமணமான பின்னால், நான் சொன்னது போல அந்த இருவருக்கும் நல்ல ஜாதகம். பாரு, ரெண்டு பேரும் தப்பிச்சிட்டாங்க. நான் மாட்டிகிட்டேன், என்று அவன் கூறும் போது தான் அது நினைவில் வந்த சிரித்திருக்கிறோம்..)
ஒரு மாலை நேரம். தேநீருக்குப் பின் சற்று நடந்து கொண்டிருந்தோம்.. நன்றாக நினைவில் இருக்கிறது. சூரியன் கிட்டதிட்ட மறைந்துவிட்டான். அந்தி நேரம். எப்போதும் போல் கருப்பு நிற சட்டையில் அவனும், கருப்பில் மஞ்சள், வெள்ளைப் பூக்கள் நிறைந்த சுடிதாரில் நான்.. அருகருகே அதுவரை பேசி களைத்தது போல அமைதியாய் நடந்து கொண்டிருந்தோம்.
லவ் பண்றியா? என சட்டென கேட்டேன்.
திர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை. இதே கேள்வியை ஒருவரை ஒருவர் நிறைய முறை கேட்டுக் கொண்டுள்ளோம்.
ஹா ஹா ஹா.. ஆமா ஆமா.. நிறையவே.. எப்போதும் சொல்கின்ற அதே பதில். நீண்ட நாட்களாக ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் நேரம் வரும் போது சொல்வதாகவும் சுற்றியுள்ளவர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தான்.. என்னையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தான்..
இப்ப என்ன திடீர்னு??? கேட்டான்.
சும்மா தான். சொல்லிட்டியா??
என்ன சொல்லிட்டியா??
லவ் பண்றேன்னு.. அந்த பொண்ணு கிட்ட?
“ஹா ஹா ஹா..” சிரித்து முடித்து ஒரு சின்ன இடைவெளி விட்டு தொடர்ந்தான்..
சொன்னா தான் காதலா என்ன.. ஒரு பொண்ண பார்த்து, பேசி, பழகி, புரிஞ்சிக்கிட்டு, அவங்கள கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துகிட்டு ஒண்ணா வாழ்றது மட்டும் காதல் இல்லையே.. எங்கயோ தூரத்துல இருந்துட்டு அவ சந்தோஷமா சிரிச்ச முகத்தோட வாழ்றத கடைசி வர சந்தோஷமா பாக்குறது கூட காதல் தான.. அது மட்டுமில்ல.. எனக்கு கொஞ்சம்.. இல்ல இல்ல.. நிறையவே பயம்.. நாம ரொம்ப நேசிக்குற ஒருத்தர் நம்ம பக்கத்துல இருக்கும் போது, அவங்க ஒரு சின்ன விஷயத்துல கஷ்டபட்டா கூட என்னால தாங்கிக்க முடியாது.. அம்மா அப்பா சரி சொல்வாங்களா தெரியாது.. அவங்க கிட்ட இருந்து அவள கொண்டு வந்த, அவங்கள கஷ்டபடுத்தி, அவளையும் கஷ்டப்படுத்தி.. இதெல்லாம் வேணாம்... அது மட்டுமில்ல.. ஒரு வேளை அவளுக்கு விருப்பம் இல்லனா... ரெண்டு பேருக்கும் கஷ்டம்.. அழகா இருக்கு, நமக்கு புடிச்சிருக்குனு ஒரு பூவ செடில இருந்து இருந்து பறிச்சு, அத வாட விடுறத விட... அத செடிலையே விட்டு அழகு பாக்குற காதலே எனக்கு போதும்...
நிதானமாக ஆனால் மூச்சு விடாமல் பதில் சொன்னான்..
தலையை சற்று தாழ்த்தி புருவத்தின் சற்று மேலே விரல்கள் படுமாறு தலையை தட்டிக் கொண்டேனாம்.. எனக்கு நினைவில்லை, அவனுக்கு அப்படித் தான் நினைவிருப்பதாக சொல்லி, அதை அவ்வபோது செய்து காட்டுவான்.. இஸ்லாமிய பெண் சலாம் செய்வது போல் இருக்கும்...
நிறைய தமிழ் படம் பார்க்காதேனு சொன்னா கேக்குறியா.. நான் சொன்னேன்...
சத்தமாய் பதிலுக்கு சிரித்தான்..
சரி இப்படி யோசிக்கலாம்.. கல்யாணம் குழந்தை மட்டும் காதல் இல்லை தான்.. ஒருத்தர் வலியை இன்னொருத்தர் தாங்கிக்குறது, சந்தோஷத்த பகிர்ந்துக்குறது, சின்ன சண்டைகள், சர்ப்ரைஸ் கிப்ட், செல்ல கோபம், சமாதானம், ஒண்ணா சமையல், ஒண்ணா மழைல நனையுறது, ஒருத்தர ஒருத்தர் திட்டிக்கிட்டே தலைய துவட்டி விடறது.. இந்த மாதிரி இன்னும் நிறைய அழகான தருணங்கள்.. அதெல்லாம் ஏன் மிஸ் பண்ணனும்.. எப்படியும் யாரோ ஒருத்தர கல்யாணம் செஞ்சிக்க போறோம்.. நமக்கு புடிச்சவங்கள கல்யாணம் பண்ணுனா என்ன.. கண்டிப்பா ஒருத்தரால ஒருத்தருக்கு கஷ்டம், மனவருத்தம் வர தான் செய்யும்.. ஆனா அதெல்லாம் தாண்டி காதல் தான் பெருசுன்னு ஈகோ பாக்காம விட்டு கொடுத்து, மறுபடியும் சந்தோஷத்த கொண்டு வந்த வாழ்ந்து காட்றது தான காதல் ஜெய்ச்சது காட்டும்..
அப்பறம்... எல்லா அம்மா அப்பாக்கும் அவங்க குழந்தைங்க அவங்களுக்கு புடிச்சவங்கள தேர்ந்தெடுத்தா வருத்தம் இருக்கத் தான் செய்யும்.. ஒரு குழந்தை பொறந்த சமாதானம் ஆகிடுவாங்கனு எல்லாரும் சொல்வாங்க.. ஆனா அப்படி இல்ல.. அவங்க எப்ப சமாதானம் ஆவாங்க தெரியுமா??” நான் நிறுத்தினேன்.. சொல்றதெல்லாம் கவனிக்கிறானா என்று தெரியும் ஆர்வம் எனக்கு...
எப்ப??? உடனே கேள்வி வந்தது.. கவனித்திருக்கிறான்..
மெலிதான புன்னகையோடு தொடர்ந்தேன்..
“நாம பாத்திருந்தா கூட இப்படி ஒரு பையன் கெடச்சிருக்க மாட்டான்.. நம்ம விட நம்ம பொண்ண நல்லா பார்துக்குறான்னு தெரிஞ்சிக்கும் போது தான்..
இப்ப என்ன சொல்ல வர.. ஒண்ணும் புரியலையே.. கொஞ்சம் அப்பாவித்தனமான குரலில் கேட்டான்..
நாம பாத்திருந்தா கூட இப்படி ஒரு பையன் கெடச்சிருக்க மாட்டான்னு எங்க அப்பா அம்மா மட்டுமில்ல, இந்த ஊர் உலகத்துல இப்படி ஒரு ஜோடி இல்லன்னு சொல்ற அளவுக்கு நீ என்ன பாத்துக்குவ, தாங்கிக்குவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. உனக்கு அந்த நம்பிக்கை இல்லையேனு சொல்ல வரேன்.. அது புரியலையா?? கேட்டு விட்டு அவனைப்பார்த்தேன்..
ச்சே ச்சே.. அப்படிலாம் இல்ல.. அதெல்லாம் நல்லா பார்த்துக்குவேன்... குனிந்த தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்த போது முகத்தில் ஆச்சரிய கோடுகள் தெரிந்தது..
“ஹே.... அப்ப உனக்கு ஓகே வா.....??” ஆள்காட்டி விரலை நீட்டிக் கேட்டான்..
“இது ரொம்ப லேட்டு..” சிரித்துக்கொண்டே நடந்தோம்.. இன்றுவரை அதே சந்தோஷத்தோடு..
பெரிதாய் சொல்லிகொள்ளுமளவு இல்லையென்றாலும் இப்படித்தான் தொடங்கியது எங்கள் காதல் அத்தியாயம்..
காதலை முதலில் சொன்னது நானென்றாலும் நான் நினைத்ததை விட என்னை அவன் அதிகமாய் நேசித்தது மெதுவாகத் தான் தெரிந்தது.. அதை நான் தெரிந்து கொண்ட ஒரு தருணம்..
-----------------------------------------------------------------------------
காதலை வீட்டில் சொல்லி திருமண தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்த நேரம்..
.....நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்..... அவனது அலைபேசி ஒலித்தது.. அலுவலகத்தில் இருந்தான்.. நான் விடுப்பு அன்று..
சொல்லு டா.. நான் தான் மறுமுனையில் என்று தெரியும்..
அப்பா கிட்ட பேசுனியா?? வீடு கேட்டியாம்.. பெருசா வரதட்சணைஎல்லாம் வாங்க மாட்டேன்.. கல்யாணம் பேச ஆரம்பிச்சதும் நா ஆம்பளனு புத்திய காட்டிட்ட இல்ல.. கோபத்தில் கொஞ்சம் சத்தமாக தான் பேசினேன்..
ரொம்ப கோபமா இருக்க.. ஈவ்னிங் மீட் பண்ணலாம்.. பேசிக்கலாம்.. என் பக்கம் என்ன இருக்குனு கேட்ப தான?? அவன் பொறுமையாகக் கேட்டான்..
எங்க? இன்னும் கோபமாக கேட்டேன்..
5 மணி.. வழக்கமா மீட் பண்ற காபி ஷாப்..
சரி.. பதிலுக்காக காத்திருக்காமல் அலைபேசியை அணைத்தேன்..
காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டான் என தெரியும்.. ஊரிலுள்ள வீட்டை என் பெயரில் எழுதிக் கேட்டிருக்கிறான் அப்பாவிடம்.. திருமண செலவு முழுதும் அவன் ஏற்றுக் கொள்வதாயும் சொல்லியிருக்கிறான்.. மாலை என்ன கதை சொல்கிறான் பார்ப்போம் எனக் காத்திருந்தேன்..
மாலை வழக்கம் போல எனக்குமுன் வந்திருந்தான்.. இருவர் உட்காரும் அந்த டேபிளில் சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தேன்..
என்ன சாப்டுற? கேட்டான்..
ஏன் அப்படி கேட்டனு சொல்லு?? உன் மேல எவ்ளோநம்பிக்கை வெச்சிருந்தேன்.. அப்பா அம்மா கிட்ட அவ்ளோ சொல்லிருந்தேன் உன்ன பத்தி.. அவசரப்பட்டு முடிவு பண்ணிட்டோமோன்னு ஒரு நிமிஷம் என்னையும் யோசிக்க வெச்சிட்ட இல்ல..” கொஞ்சம் கோபம் குறைந்திருந்தது எனக்கு..
“இத படி..” காகிதம் ஒன்றை நீட்டினான்..
திருமணத்திற்கு பிறகு குடியேற பிளாட் வாங்க போவதாய் சொல்லி இருந்தான்.. அலுவலகத்தில் இருந்து 20 அல்லது 30 நிமிட தூரத்தில் இருந்தது.. புக் செய்ததற்கான ரசீது.. ஆனால் ஆச்சரியம் அது அப்பா, அம்மா பெயரில் இருந்தது தான்..
புரியல இது.. 28 வருஷமா நாங்க இருக்குற வீடு.. ஊருல இருக்கு.. அது நமக்கு.. நாம வேலை பார்த்து, வாழ போற இடத்துக்கு பக்கதுல அப்பா அம்மா பேர்ல வீடு.. இது என்ன கொடுக்கல் வாங்கல்..? கல்யாணத்துக்கு அப்புறம் நிம்மதியா ஊர்ல பொழுத கழிக்கலாம்னு இருக்குற அவங்க, இது நம்ம வீடு இல்லைங்கற நெனப்புல அங்க இருக்கனுமா?” கொஞ்சம் கடுப்பாகி கேட்டேன்..
“இல்ல.. அப்பா, அம்மா நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இங்க தான் இருக்க போறாங்க.. ஒரு பிளாக் தள்ளி இன்னொரு பிளாட்ல நாம இருக்க போறோம்..
சத்தியமா ஒண்ணும் புரியல என்பது போல் பார்த்தேன்.. அவன் தொடர்ந்தான்..
கல்யாணத்துக்கு அப்புறம் பையன் வீட்டுக்கு பொண்ணு வந்துடணும்.. அப்பா அம்மாவை விட்டுட்டு... இதெல்லாம் எவன் கண்டு பிடிச்சானு தெரியல.. படிப்பு, வேலைனு பையன்தான் அப்பா அம்மா விட்டு தள்ளி இருப்பான்.. பொறந்ததுல இருந்து அப்பா அம்மா கூடவே இருக்குற பொண்ணு கூட தான் அவங்க க்ளோஸ்ஆ இருப்பாங்க.. அவங்கள பிரிக்காம நியாயமா பையன் தான அவங்க கூட போய் சேர்ந்து இருக்கணும்.. பிரிஞ்சு வந்துட்டா அது எவ்ளோ கஷ்டமா இருக்கும்.. தள்ளி வந்துட்டோம்னு நீயும் அவங்கள மிஸ் பண்ண கூடாது.. கல்யாணம் ஆகி போய்ட்டானு அவங்களும் உன்ன மிஸ் பண்ண கூடாது...
கொஞ்சம் புரிந்தது..
அதெல்லாம் சரி.. அவங்கள நம்ம கூட வச்சிக்கலாம்.. அதுக்காக அந்த வீடு உனக்கு எதுக்கு.. ஊர்ல அவங்களுக்கு இருக்குற ஒரே சொத்து அது தான..? அவங்க காலத்துக்கு அப்புறம் எனக்கும் தங்கச்சிக்கும் பிரிச்சி குடுக்குறாங்க.. இல்ல தங்கச்சிக்கு குடுக்குறாங்க..நமக்கு எதுக்கு?”
“நம்ம பேர்ல இருந்தாலும் அது அவங்க வீடு தான்.. எப்ப வேணும்னாலும் போய்ட்டு வரட்டும்.. ஆனா அவங்க பேர்ல அது இருந்தா, இங்க இருக்குற வரைக்கும் இது நம்ம வீடு இல்ல, நம்ம வீடு ஊர்ல இருக்கு.. அங்க போய்டணும்னு தோணிகிட்டே இருக்கும்.. சின்ன கோபம், வருத்தம் வந்தாலும் என் வீட்டுக்கு போறேன்னு தன் நினைக்க தோணும்.. இங்க இருக்குறது தான் சொந்த வீடுனா இங்க தான இருந்தாகணும்.. அப்புறம் அந்த வீடு எனக்கு ஏன் வேணும்னா அது நீ பொறந்து, வளர்ந்த வீடு.. சின்ன வயசுல நீ குளிச்ச இடம், ஓடி விளையாடின இடம், சுவத்துல வரைஞ்சகிறுக்கல், துணி மடிச்சி வச்ச அலமாரி, ரெட்டை ஜடை பின்னின கண்ணாடி, முதல்ல சமையல் பண்ணின சமையற்கட்டு.. உன்ன பத்தி கதை சொல்ற நிறைய பொக்கிஷம் அங்க தான இருக்கு.. அது வேணும் எனக்கு..
எப்ப வேணும்னாலும், எவ்ளோ நாள் வேணும்னாலும் அப்பா அம்மா அங்க போய்ட்டு தங்கிட்டு வரட்டும்.. அது நம்ம வீடுன்னு இருந்தா நாமளும் அப்பப்ப போவோம்... நீ படிச்ச ஸ்கூல், சைக்கிள் பழகின தெரு, மிட்டாய் வாங்கி சாப்பிட்ட கடை, ஓடி விளையாண்ட திண்ணை, சுத்தி வந்த கோவில் பிரகாரம் எல்லாம் எனக்கு காட்டி கதை சொல்லு..
பயப்படாதே.. வீட்டை எழுதி வாங்கிட்டு அப்பா, அம்மாவை அப்படியே விட்டுட மாட்டேன்.. அவங்க எனக்கும் அப்பா அம்மா தான்..
எனக்கு கொஞ்சம் கண் கலங்கியது.. இருந்தாலும் சற்று கடுமையாக, அது சரி.. ஆனா இதெல்லாம் என்கிட்டே முன்னாடி ஏன் சொல்லல.. அப்ப எல்லாம் தனிய முடிவெடுக்க ஆரம்பிச்சிட்ட.. என்ன மதிக்கல.. அப்படித் தான?? என்று கேட்டேன்..
சமாதானம் ஆகி விடுவேனென்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம்.. சற்று தாழ்ந்த குரலில், அய்யோ அப்படிலாம் இல்லை.. ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு ட்ரை பண்ணேன்.. நீ என்ன இன்னும் கோபப்படுற.. நீ ரொம்ப நல்லவன்டா தான உன் டயலாக்... அத விட்டுட்டு வேற சொல்ற...
மெதுவாக அவனிடம்.. “சண்டை போடறதுன்னு முடிவு பண்ணிட்டு தான் வீட்ல இருந்து வந்தேன்.. எதாவது ஒரு சண்டை போடனும்ல..” என்றேன்.. சிரித்தே விட்டான்..
சென்னையில் எல்லாம் தங்க முடியாது என்று மறுத்த அப்பா அம்மாவை நாள் கணக்கில் சமாதானம் செய்து, திருமணமான இரண்டே நாளில் நான் பிள்ளை உண்டாகி இருக்கிறேன் என பொய் சொல்லி அவர்களை இங்கே அவன் அழைத்து வந்தது பெரும்கூத்து..
சின்ன சின்ன விஷயங்களில் கூட பார்த்து பார்த்து செய்வது, எனக்கு எது சந்தோஷம் என அதை முதலில் யோசிப்பது, இது தான் வாழ்கையில் பல தருணங்களை மறக்க முடியாததாய், காதல் நிறைந்ததாய் மாற்றி விடுகிறது..
சாதாரண தருணங்கள் கூட சிலமுறை அழகானதாய் மாறி விடுகிறது.. உண்மையில் காதலுக்குத் தான் அந்த சக்தியுண்டு.. அது நம்மை சுற்றி நடக்கும் சாதாரண விஷயங்களைக் கூட அது அழகானதாக மாற்றி விடுகிறது..
விடுமுறை நாளில் சில நேரங்கள் வீட்டில் இருவரும் திரைப்படங்கள் பார்ப்பதுண்டு.. ஒரு நாள் ரஜினிகாந்த், மீனா நடித்த எஜமான் என்ற திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.. அடிக்கடி பார்க்கும் படங்களில் அதுவும் ஒன்று.. மீனாவிற்கு குழந்தை பிறக்கப் போவதில்லை என ரஜினிக்கு தெரியும்.. ஒரு சீனில் பிறக்க போகும் குழந்தைக்கு பெயர் என்ன வைக்கலாம் என மீனாவும், ரஜினியும் பேசிக் கொள்வார்கள்.. பெண் குழந்தை தான் பிறக்கும் என்றும், அதற்கு வைத்தீஸ்வரி என தன் மனைவியின் பெயரை வைத்து, வாழ்நாள் முழுவதும் அந்த பெயரை மட்டும் தான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று ரஜினி சொல்வதாய் வரும்.
பின் ஆண் குழந்தை என்றால், வானவராயன் என்ற தன் பெயரை வைக்க வேண்டும் என்றும், டேய் வானவராயா என்று செல்லமாய் அதட்டி பெயர் சொல்லி கூப்பிடுவதை தான் ரசிக்க வேண்டும் என்றும் மீனாவிடம் சொல்வது போலவும் வரும்.. அந்த காலத்தில், பெண்கள் தங்கள் கணவன் பெயரைக்கூட யாரிடமும் சொல்லமாட்டார்கள்.. மனைவி அதை சொல்லக் கேட்டு கணவன் ரசிக்க விரும்புவதாய் இருக்கும் அந்த காட்சி.. பின் மீனா வெட்கப்பட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட, தனக்கு குழந்தை வரன் இல்லையென்பதை அறிந்த ரஜினி கண் கலங்குவார்...
அந்தக் காட்சி வரும்போதெல்லாம் எங்கள் இருவருக்கும் கண் கலங்கும்.. ஒருவரையொருவர் மாற்றி கண் துடைத்துக்கொண்டு, நானும் அப்படித் தான்.. உன் பெயரை மட்டும் தான் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பான்.. உன் பெயரின் ஒரு பாதியில் அப்படித் தான் என் பெயர் சேர்ந்தது..
எனக்கு இன்னொரு பழக்கம் உண்டு.. சில நேரம் டிவி பார்த்துக் கொண்டே சோபாவில் தூங்கிப்போவேன்.. அவன் என்னைத் தூக்கிக்கொண்டு கட்டிலில் போட்டு, போர்த்தி விடுவது வழக்கம்.. சில நேரம் வேண்டும் என்றே கண்களை மூடிக் கொண்டு தூங்குவதுபோல் நடிப்பதுண்டு, அவனை தூக்க வைக்க வேண்டுமென்று.. சாதாரணமாக தூக்கச் சொன்னால், சாப்பாட்டை குறை, ரொம்ப குண்டா இருக்க.. திடீர்னு வெய்ட் தூக்குனா எங்கயாவது புடிச்சிக்கும் என்று கிண்டல் செய்வான்..
ஒரு நாள் அப்படித் தான் நடித்துக் கொண்டிருந்தேன்.. டிவியில் கமலின் கண்மணி அன்போடு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.. அதில் கமல் ரோஷினியை தூக்கிக் கொண்டு அபிராமியே தாலாட்டும் சாமியே என்று பாடுவது போல் வரும்... அதே போல அபிராமியே என்று பாடிக் கொண்டே தூக்கிக்கொண்டு போனான்.. நடிப்பதை மறந்து நான் சிரித்தே விட்டேன்.. ஒரு நிமிடம் நின்றான்.. இறக்கி விட்றாத பா.. ப்ளீஸ்... சோம்பல் குரலில் கெஞ்சிக் கேட்டேன்.. அப்ப நீ பாடு, நான் தூக்கிட்டு போறேன் என்று சொல்லி, நான் பாட, கொஞ்சம் ஆடிக்கொண்டே தூக்கிப் போனது அழகான தருணம்..
காதலை சொல்வது, பிறந்த வீடு, ஊர், சினிமா எல்லாம் எல்லாருடைய வாழ்விலும் உள்ள சாதாரண விஷயங்கள் தான்.. ஆனால் அதை அழகான, மகிழ்ச்சியான, வாழ்நாள் முழுதும் நினைத்து சிலாகிக்குமாறு தருணங்களாய் மாற்றி விடுதல் தான் அழகு.. அத்தகைய தருணங்களை உருவாக்க மெனக்கெடுதல் தான் காதலில் வாழ்வது என்பது..
ஓர் சராசரி ஆணாய் பெண்ணாய் கணவன் மனைவியாய் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் சராசரியையும் சாதாரணத்தையும் அழகியனவாய் மாற்றி வாழும் போது தான் அதை வாழ்தல் என சொல்லுவோம்.. இருப்பதற்கும் வாழ்வதற்கும் உள்ள வித்தியாசம் அது..
இன்னும் பல தருணங்கள் உண்டு.. அவையெல்லாம் உன் மடல் கண்டு.. எங்களின் இருவரின் அன்பும், காதலும், ஆசீர்வாதங்களும் உனக்கு என்றும் உண்டு..
அன்புடன், அப்பா & அம்மா..

Monday, April 2, 2018

என் காதல் நாட்கள் - 1


அன்பு மகளுக்கு,

நானும் உன் அம்மாவும் சேர்ந்தே எழுதிக் கொள்வது.. இருவரும் நிறைய நலத்துடனும் காதலுடனும் இருக்கிறோம்.. உன் நலமறிய விழைகிறேன்.

என்ன புதிதாய் கடிதம் என யோசிக்க வேண்டாம்.. தொலைபேசியில் காதலையும் வாழ்கையைப் பற்றியும் குழப்பமாக உள்ளதென சொன்னாய்.. படிப்பதற்கென சென்று நல்ல வேலையில் வெளிநாட்டில் தங்கிப் போன உன்னிடம் தொலைபேசியில் பேசி மறந்து போகும் வார்த்தைகளாய் இவை இருந்து விடக்கூடாது என்றே இந்த முயற்சி. எதையுமே கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நானும் உன் அம்மாவும் சேர்ந்தே எடுக்கும் ஒரு முயற்சி.. இன்றில்லை என்றாலும் மீண்டும் என்றாவது இக்கடிதத்தின் வார்த்தைகள் உன் வாழ்க்கைக்கு உதவும் நிச்சயம்..

வளரிளம் பருவம் தாண்டி நிற்கும் உனக்கு காதலைப் பற்றிய குழப்பங்கள் வருவது தவறில்லை.. சினிமா தாக்கம், புது மக்கள், பல கலாச்சாரம் என உன்னைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் காதலைக் கற்றுத் தர முயற்சிக்கும்.. இது தான் காதல், இப்படித் தான் இருக்கும் என்று எனக்கும் வரையறைப்படுத்திச் எங்களுக்கு  சொல்லத் தெரியாது.. ஏனென்றால் காதலுக்கென்று ஒரு வரம்பு, வரையறை கிடையாது.. நாங்களும் வைத்துக் கொண்டதில்லை.. நீயும் வைத்துக் கொள்ளாதே..

காதலை நாம் தேடி செல்ல வேண்டியதே இல்லை.. அது நம்மைச் சுற்றித் தான் இருக்கும்.. சரியான தருணத்தில் அதை உணர்ந்து கொள்வாய்.. அப்போது அதில் விழுந்து கொள்வாய்.. அதை கெட்டியாக பிடித்துக் கொள்.. கால ஓட்டத்தில் அதை மறந்து விடாதே.. சின்னச் சின்ன விஷயங்களில் தான் ஒளிந்திருக்கிறது காதல்..

காலம் முழுதும் கரையாமல் இருக்கும் காதலுக்கு, எது எதையோ எடுத்துக் காட்டாய் சொல்லி, காற்றில் மறையும் வார்த்தைகளை சொல்வதை விட, எங்கள் வாழ்கையை தான் நல்ல எடுத்துக்காட்டாய் தர விரும்புகிறோம்..

எப்படித் தான் நாங்களும் இருந்தோம் என்று உன்னிடம் பகிர்ந்து கொண்டால், என்றேனும் ஒரு நாள், ஒரு தருணத்தில் அட இவர்களைப்போல இப்படியும் இருக்கலாம் என்று புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறோம்..

பெரிய கடிதம் என்று வேகமாய் படித்து முடித்து விடாதே.. மெதுவாக, கொஞ்சம் பொறுமையாக, புரிதலோடு, படி.. தேவையெனில் மீண்டும் படி.. மீண்டும் மீண்டும் படி... ஏதேனும் ஒரு வார்த்தையில், வரியில் உனக்கான பதில் கிடைக்கும்..

எத்தனையோ நினைவுகள் இருந்தும், உன்னைத் தெரிந்து கொண்ட அந்த நினைவோடு தான் தொடங்க நினைக்கிறேன்..

-------------------------------------------------------------------------------------------------

அந்த நாள் அவ்வளவு எளிதாய் மறந்து விடக் கூடிய நாள் இல்லை.. ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்குப்பின் இருக்கும்.. பலமுறை அழுத்தி திருப்தி தராததால் தொலைக்காட்சி ரிமோட்டிற்கு கொஞ்சம் ஓய்வளித்தேன். டைனிங் டேபிளில் வாரப்பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருந்தாள் அவள். அவளருகே ஒரு சேரை இழுத்துப்போட்டு நானும் உட்கார்ந்தேன்..

கொஞ்ச நாளா எதாவது மனசுக்குள்ள வச்சிட்டு குழப்பிகிட்டு இருக்கியா? நான் கேட்டேன்..

இல்லையே .. அப்படிலாம் ஒன்னுமில்லையே.. நிமிர்ந்து ஆச்சரிய பார்வையோடு பதிலளித்தாள்..

அப்ப உடம்புக்கு ஏதும் சரி இல்லையா?? நெற்றியில் கை வைத்துக் கேட்டேன்..

இல்லயே.. நல்லா இருக்கேனே.. என்னாச்சு உனக்கு?? பத்திரிக்கையை மூடி வைத்துக் கேட்டாள்..

இல்ல.. கொஞ்ச நாளா நீ டையார்டா இருக்குற மாதிரி தோணுச்சி.. அதான் கேட்டேன்.. ஒண்ணுமில்லணா ஓகே தான்.. ரெஸ்ட் எடு.. என்றேன்..

ம்ம்.. ஆமா இல்ல.. நானும் கொஞ்சம் ஃபீல் பண்ணுனேன்.. டையார்டா தான் இருக்கு.. நாளும் தள்ளிப் போச்சு.. ஒருவேளை நீ அப்பாவாக போறியோ??

என்ன.. அப்பாவாகவா???! கொஞ்சம் வேகமாக துடிப்பது போலிருந்தது இதயம்.. எவ்வளவு சாதாரணமாக கேட்கிறாள்..

ஹே என்ன சொல்ற.. நிஜமாவா?? உற்சாகமானேன்..

ஆமா பா.. நா கன்ஃபர்ம் பண்ணிட்டு சொல்லலாம் நெனச்சேன்.. நீங்க தான் உன் சின்ன அசைவு கூட உன் கண்ணுலேயே தெரியுதுனு எல்லாத்தையும் ஈசியா கண்டு பிடிச்சிற.. டாக்டர் கிட்ட போய் செக்பண்ணிக்கலாமா பா? கொஞ்சலாய் கேட்டாள்.

இப்பவே போகலாம்.. காரில் கிளம்பினோம்.

அரை மணி நேரம் ஆகும்.. வெயிட் பண்ணுங்க என்று சொன்னார்கள்.. கடிகாரம் மெதுவாய் நகர்வது போல் இருந்தது.. ஒருவருக்கொருவர் காத்திருந்த நேரம் கூட இவ்வளவு மெதுவாக நேரம் நகர்ந்தது போல் நினைவில்லை.. கைவிரல்களை கோர்த்து அமர்ந்திருந்தாள்.. எக்ஸைடடா இருக்கா?? மெதுவாய் கேட்டாள்.. நிறையவே.. நானும் மெதுவாய் பதிலளித்தேன்...

முடிவே செய்து விட்டாள் போலும்.. ஒரு வேளை எதிர்பார்த்தது போல் இல்லையென்றால் தாங்கிக் கொள்வாளா? பாவம் எவ்வளவு நாள் இதை நினைத்துக் கொண்டிருந்தாளோ தெரியவில்லையே..

குழந்தை என்றொரு ஆனந்தம் வரப்போகிறது என்பதை விட அவள் வருந்தும்படி எதாவது நடந்து விடுமோ என்ற பயம் தான் அதிகம் எனக்கிருந்தது.. உள்ளே அழைத்தார்கள்..

உலகில் எத்தனை தெய்வங்கள் உண்டோ தெரியாது.. ஆனால் அத்தனை பேரையும் வேண்டிக் கொண்டேன்.. அவளை ஏமாற்றி விடாதே என்று..

ரிசல்ட் எங்களுக்கு சாதகமாய் தான் இருந்தது.. டாக்டர் அறையில் இருவரும் கைகளை இறுக பற்றிக் கொண்டு தான் அமர்ந்திருந்தோம்.. டாக்டர் சொல்வதைக் கேட்க கேட்க கைகளில் இறுக்கமும் எங்களுக்குள் நெருக்கமும் கூடிக்கொண்டே போனது..

எங்கயாவது வெளிய போயிட்டு வீட்டுக்கு போகலாமா?? எனக்கு முன் முந்திக் கொண்டாள். நானும் அதையே கேட்க நினைத்தேன். ஈசிஆர் பீச் பக்கம் கார் சென்றது..

எங்களுக்கு பிடித்த இடம்.. அவள் கண்களில் அத்தனை ஆனந்தம்.. என் கண்களிலும் அதையே அவளும் பார்த்திருப்பாள்..

கைகளை கோர்த்துக் கொண்டே நடந்தோம்.. மயங்கிப் போகும் மாலைப்பொழுதில் வானம் இன்னும் வண்ணமாய் தெரிந்தது.. அருகில் இருந்த வீட்டின் கோட்டை சுவற்றில் தொட்டியில் பூத்திருந்த ஒற்றை ரோஜா அவ்வளவு அழகாய் இருந்தது.. இல்லாத வானவில் இருவர் கண்ணுக்கும் தெரிந்தது.. மழை நேர வெயில் வண்ணமயமாய் தெரிந்தது.. கைகள் கோர்த்து நடக்கும் ஒவ்வொரு நொடியும் இவ்வளவு பெரிய இந்த உலகம் சுருங்கி எங்களுக்கான சின்ன உலகமாய் மாறி நாங்கள் இருவரும் மட்டுமே உள்ளது போல, யாருக்குமே இல்லாத மகிழ்ச்சி எங்களுக்கு மட்டுமே உள்ளது போல பிரமை தோன்றியது..

வழக்கம் போல கோவிலுக்குச் சென்றோம்.. கால்கள் தானே சென்றது என்று தான் சொல்ல வேண்டும்.. கடவுளை வணங்கி நான் வழக்கம் போல கடைசி தூணின் கீழ் அமர, பிரகாரத்தை சுற்றி வந்தாள்.. அருகில் அமர்ந்து என் நெற்றியில் மெல்லிய விரலால் ஒரு கீற்று இட்டு, பின் கைகளை குவித்து மெதுவாய் ஊதி விட்டாள்.. ஒரு நாளும் நான் என் நெற்றியில் திருநீறு இட்டதில்லை.. அவள் இட்டு விட வேண்டும் என்பதற்காகவே.. அவ்வளவு அழகாய் இருக்கும்..

வெளியே வந்தோம்.. கொஞ்சம் மல்லிகை.. கொஞ்சம் பிச்சிப்பூ.. அவளுக்கு பிடித்த மாதிரி.. பூக்கடைக்காரியிடம் வாங்கினேன்.. என்னை வைத்து விடச் சொன்னாள்..

கொஞ்சம் தள்ளி சர்ச் இருந்தது.. வழக்கமாய் அங்கேயும் செல்வோம்.. இன்றைக்கும்.. எப்போதும் இரண்டு மெழுகுவர்த்திகள் வாங்கி வைப்பாள்.. இன்றைக்கு மூன்று.. எனக்கு அர்த்தம் புரிந்தது.. புன்னகைத்துக் கொண்டேன்..

வெளியே வந்த பின் கேட்டேன்.. உனக்கு எந்த கடவுள் மேல நம்பிக்கை அதிகம்..? கோவிலுக்கும் போற.. சர்ச்க்கும் போற..?

நிதானமாக பதிலளித்தாள்.. எந்த கடவுள் மேல நம்பிக்கை வைக்குறோம்னு இல்ல.. எவ்வளவு நம்பிக்கை வைக்றோம்னு தான் முக்கியம்.. யோசிச்சி பாரு.. நம்ம ரெண்டு பேருக்கும் எப்பவாது இது தான் காதல், இவ்வளவு தான் காதல் னு தோணுச்சினா அதுக்கு மேல காதலிக்க முடியுமா.. அப்படி தான் கடவுளும்.. இது தான் கடவுள், இவ்வளவு தான் கடவுள் னு நினைச்சிட்டா அதுக்கு மேல நம்பிக்கை இல்லாம போய்டும்.. கடவுள் கோவில் சர்ச் ல இல்ல.. கடவுள்னு ஒரு சக்தி இருக்குங்கற நம்பிக்கை தான் கோவிலையும் சர்ச்லையும் இருக்கு... நானும் அங்க போய், ஆமா கடவுள் னு ஒருத்தர் இருக்கார்ங்கற நம்பிக்கைய அங்க வர மக்களுக்கு கொடுத்துட்டு வரேன்.. அவ்வளவு தான்..

அவள் வேதாந்தங்கள் எனக்கு அவ்வளவு எளிதாய் புரிந்து விடுவதில்லை.. சத்தியமா ஒன்னும் புரியல.. ஆனா நீ என்ன சொன்னாலும் அதோட அர்த்தம் அழகா இருக்கு.. உன்ன மாதிரியே.. புன்னகைத்துக் கொண்டேன்..

கடற்கரை மணலில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்து கொண்டோம்.. பேசிக் கொள்ளவில்லை.. நேரம் போனதே தெரியாமல் சற்று இருட்டிய பின் கிளம்பினோம்..

கோர்த்துக் கொண்ட கைகளை விடவேயில்லை.. காரில் கியர் மீது என் கைகளை வைத்துக் கொள்ள, என் கை மீது கை பதித்துக் கொண்டாள்.. மிதமான வேகத்துடன் சென்று கொண்டிருக்க சொல்லி வைத்தாற்போல் வானொலியில் எங்கள் இருவருக்கும் பிடித்த பாடல்..

பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே.. பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே.. காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே.. வாசனை திரும்பியதில் உனக்கென கோபமே... விதியென்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்.. நதி வழி போகின்றோம்.. எந்தக் கரை சேர்கின்றோம்..

வரிகளை முணுமுணுத்துக்கொண்டே என் மீது சாய்ந்திருந்தாள்.. அவள் கண்களை பார்த்து போது தோன்றியது.. இது தான் காதல் என்று எந்த இடத்திலும் நின்று விடவே முடியாது.. மீண்டும் மீண்டும் காதலில் விழுந்து கொண்டே தான் இருக்க முடியும்..

இதை விட அவளுக்கு இன்னும் பிடித்த பாடல் ஒன்று உண்டு... என்னைத் தான் அன்பே மறந்தாயோ! என்ற வரிகள் வரும் போது அவள் கண்களை பார்க்க வேண்டுமே.. மறப்பேன் என்றே நினைத்தாயோ! என்று பதில் தராமல் என் பார்வையை திருப்பிக் கொள்ளவே முடியாது.. அத்தனையும் காதல்..

காலையில் மீந்திருந்த இரண்டு இட்லிகளை ஆளுக்கொன்றாய் ஊட்டி விட்டு இரவுணவை முடித்துக் கொண்டோம்.. பசிக்கவே இல்லை.. மனம் முழுதாய் நிறைந்திருந்தது..

-------------------------------------------------------------------------------------------------

பதட்டத்தில் கோர்த்திருந்த கைகள், பரவசத்தில் கோர்த்திருந்த கைகள், பதட்டத்திலும் பரவசத்திலும் உனக்காய் நான் இருக்கிறேன் என்று பரிமாறிக் கொண்ட உணர்வு, நெற்றியில் திருநீறு இட்ட போது, தலையில் பூக்கள் சூடிக் கொண்ட போது, மெழுகுவர்த்திகளை அவள் பிடிக்க நான் பற்ற வைத்த போது, தோள் சாய்ந்து மௌனமாய் பேசிக்கொண்ட போது, சிறிது உணவென்றாலும் அவள் உண்ணட்டும் என்று நானும், நான் உண்ணட்டும் என்று அவளும் பசிக்கவே இல்லை என்ற போது, உண்ணாது விடுவாளோ என ஒவ்வொரு விள்ளலும் ஊட்டி விட்ட போது, ஒவ்வொரு தருணங்களிலும் எங்களை தழுவிக் கொண்டது காதல்..

நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என்று நாம் அளவிட முடிவதில்லை காதல்.. வாழும் ஒவ்வொரு நொடியிலும், தருணங்களிலும் புதியது போல மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டே இருப்பது தான் காதல்..

எல்லாரையும் போல அந்த தருணங்களை ஓடி கடந்து விட நாங்கள் விரும்பியது இல்லை.. நின்று, நிதானமாக அந்த நொடியை வாழ்ந்து, காதலை உணர்ந்து, அனுபவித்து வாழவே விரும்பினோம்.. அப்படி ஒவ்வொரு நொடியைக் கூட விடாமல் காதல் செய்யும் விதத்தைநீயும் கற்றுக் கொள்ள விரும்புகிறோம்..

எங்கள் இருவருக்கும் எல்லாம் ஒத்துப் போகிறது.. ஒரே மாதிரி சிந்திக்கிறோம்.. அதனால் தான் இப்படி வாழ முடிகிறது என்று பலர் சொல்லியிருக்கிறார்கள்.. உண்மை அதுவல்ல.. எங்களுக்குள்ளும் நிறைய வாக்குவாதம் இருந்திருக்கிறது.. சண்டைகள் இருந்திருக்கிறது.. இப்போதும் எனக்குப் பிடித்து அவளுக்குப் பிடிக்காத விஷயங்கள், அவளுக்குப் பிடித்து எனக்குப் பிடிக்காத விஷயங்கள் இருக்கிறது.. வேறுபாடே இல்லாமல் யாரும் இருக்க முடியாது.. ஆனால் அந்த வேறுபாடுகளை புரிதல், கொஞ்சம் விட்டுத் தருதல், ஒருவர் மற்றவருக்கு அவருக்கான இடம் தருதல் என்றே இருந்தால் காதல் ஏன் குறைய போகிறது..

சண்டை பிடிக்கும் தருணங்களில், கண்ணால் பேசும் பெண்ணே, எனை மன்னிப்பாயா! என்றும், கோபம் கொண்ட தருணங்களில்     கண்ணாடியில் அவள் முகம் தெரியும்படி வைத்து, கண்ணாடியில் உள்ள உருவத்தை சமாதானம் செய்தும், கோபத்தில் உண்ண மறுக்கும் தருணங்களில் மின்னும் சிலையே.. அன்னை போல் வரவா நானும் சோறூட்ட.. உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னைச் சீராட்ட.. என்றும் பாட்டுப் பாடியும் என் மன்னிப்பையும் காதலையும் சேர்த்தே கொடுத்திருக்கிறேன்..

பல நேரங்களில் அவளும் கண்ணா.. கலக்கமா.. நெஞ்சில் வருத்தமா.. கண்ணீர் இனி ஏனம்மா.. இனி மேல் நான் தான் அம்மா.. என்றும், 108 முறை ஸ்ரீஇராமஜெயம் போல மன்னித்து விடு என்று ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதிக் கொடுத்ததும் நடந்திருக்கிறது..

சின்ன விஷயங்கள் தான்.. ஐ ஆம் சாரி.. என்று ஒரே வரியில் முடித்திருக்கலாம்.. ஆனாலும் இருவருமே சண்டைகளிலும், கோபங்களிலும், வாதங்களிலும் கூட காதலையே தேடினோம்.. தருணங்கள் தானே உருவாகும் என்று காத்திருப்பதை விட கிடைப்பதை எல்லாம் நல்ல தருணங்களாக மாற்றிக் கொண்டு வாழ பழகிக் கொள்..

நான் பெரியவன் என்றோ, பெரியவள் என்றோ நினைக்காமல் ஒருவருக்காக மற்றொருவர் என்று வாழ பழகுங்கள்.. எனது உடைகளை தேய்த்துக் கொடுப்பதிலும், காலனிகளுக்கு பாலிஷ் போட்டுத் தருவதும், வெளியே செல்லும் போது தலை சீவி விடுவதும், தூங்கிய பின் போர்த்தி விடுவதும், எத்தனை முறை கேட்டாலும் ஊட்டி விடுவதும், விட்டதும், சேலை மடிப்புகளை சரி செய்வதும், அவள் காலனிகளை மாடி விடுவதும், கைப்பையை நான் சுமப்பதும், நெற்றியில் குங்குமம் இடுவதும், அவள் டூத்ப்ரஷை மாதம் ஒரு முறை நான் மாற்றி வைப்பதும், அவளுக்கு சமைத்துக் கொடுப்பதும், அன்றாட விஷயம் என்றோ, சாதாரண விஷயங்கள் என்றோ, சின்ன விஷயங்கள் என்றோ கடந்து விடுவதில்லை.. ஒவ்வொரு முறையும் அதே காதலோடும் உற்சாகத்தோடும் தான் செய்கிறோம்..

காலத்தின் ஓட்டத்தில் நாமும் ஓடிக் கொண்டு, வாழ்க்கைக்கென வேலைக்கும் பணத்திற்கும் ஓடிக் கொண்டு நம் அருகிலேயே இருக்கும் அழகான வாழ்க்கையை மறந்து விடுகிறோம்.. ஓடிக் கொண்டே முடிந்து விடுவதில்லை வாழ்க்கை.. நாம் நிற்கும் போது, கடந்து வந்த பாதையில் எதையுமே கண்டுகொள்ளாமல் வந்திருந்து, பின்னர் வருந்தி பலனில்லை.. இப்போது வாழும், கடக்கும் இந்த நொடியை வாழ்வதற்கு கற்றுக் கொள்..

சொல்லித் தெரிவதில்லை காதல்.. அது உணர்ந்து கொள்வது.. நீயும் உணருவாய் - அதை உணர்ந்து கொள்ள விரும்பினால்..

இன்னும் பல தருணங்களை பிறிதொரு நாள் பகிர்ந்து கொள்கிறேன்..

மற்றவை உன் மடல் கண்டு.. எங்களின் இருவரின் அன்பும், காதலும், ஆசீர்வாதங்களும் உனக்கு என்றும் உண்டு..

                                     அன்புடன், அப்பா & அம்மா..