Monday, April 2, 2018

என் காதல் நாட்கள் - 1


அன்பு மகளுக்கு,

நானும் உன் அம்மாவும் சேர்ந்தே எழுதிக் கொள்வது.. இருவரும் நிறைய நலத்துடனும் காதலுடனும் இருக்கிறோம்.. உன் நலமறிய விழைகிறேன்.

என்ன புதிதாய் கடிதம் என யோசிக்க வேண்டாம்.. தொலைபேசியில் காதலையும் வாழ்கையைப் பற்றியும் குழப்பமாக உள்ளதென சொன்னாய்.. படிப்பதற்கென சென்று நல்ல வேலையில் வெளிநாட்டில் தங்கிப் போன உன்னிடம் தொலைபேசியில் பேசி மறந்து போகும் வார்த்தைகளாய் இவை இருந்து விடக்கூடாது என்றே இந்த முயற்சி. எதையுமே கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நானும் உன் அம்மாவும் சேர்ந்தே எடுக்கும் ஒரு முயற்சி.. இன்றில்லை என்றாலும் மீண்டும் என்றாவது இக்கடிதத்தின் வார்த்தைகள் உன் வாழ்க்கைக்கு உதவும் நிச்சயம்..

வளரிளம் பருவம் தாண்டி நிற்கும் உனக்கு காதலைப் பற்றிய குழப்பங்கள் வருவது தவறில்லை.. சினிமா தாக்கம், புது மக்கள், பல கலாச்சாரம் என உன்னைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் காதலைக் கற்றுத் தர முயற்சிக்கும்.. இது தான் காதல், இப்படித் தான் இருக்கும் என்று எனக்கும் வரையறைப்படுத்திச் எங்களுக்கு  சொல்லத் தெரியாது.. ஏனென்றால் காதலுக்கென்று ஒரு வரம்பு, வரையறை கிடையாது.. நாங்களும் வைத்துக் கொண்டதில்லை.. நீயும் வைத்துக் கொள்ளாதே..

காதலை நாம் தேடி செல்ல வேண்டியதே இல்லை.. அது நம்மைச் சுற்றித் தான் இருக்கும்.. சரியான தருணத்தில் அதை உணர்ந்து கொள்வாய்.. அப்போது அதில் விழுந்து கொள்வாய்.. அதை கெட்டியாக பிடித்துக் கொள்.. கால ஓட்டத்தில் அதை மறந்து விடாதே.. சின்னச் சின்ன விஷயங்களில் தான் ஒளிந்திருக்கிறது காதல்..

காலம் முழுதும் கரையாமல் இருக்கும் காதலுக்கு, எது எதையோ எடுத்துக் காட்டாய் சொல்லி, காற்றில் மறையும் வார்த்தைகளை சொல்வதை விட, எங்கள் வாழ்கையை தான் நல்ல எடுத்துக்காட்டாய் தர விரும்புகிறோம்..

எப்படித் தான் நாங்களும் இருந்தோம் என்று உன்னிடம் பகிர்ந்து கொண்டால், என்றேனும் ஒரு நாள், ஒரு தருணத்தில் அட இவர்களைப்போல இப்படியும் இருக்கலாம் என்று புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறோம்..

பெரிய கடிதம் என்று வேகமாய் படித்து முடித்து விடாதே.. மெதுவாக, கொஞ்சம் பொறுமையாக, புரிதலோடு, படி.. தேவையெனில் மீண்டும் படி.. மீண்டும் மீண்டும் படி... ஏதேனும் ஒரு வார்த்தையில், வரியில் உனக்கான பதில் கிடைக்கும்..

எத்தனையோ நினைவுகள் இருந்தும், உன்னைத் தெரிந்து கொண்ட அந்த நினைவோடு தான் தொடங்க நினைக்கிறேன்..

-------------------------------------------------------------------------------------------------

அந்த நாள் அவ்வளவு எளிதாய் மறந்து விடக் கூடிய நாள் இல்லை.. ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்குப்பின் இருக்கும்.. பலமுறை அழுத்தி திருப்தி தராததால் தொலைக்காட்சி ரிமோட்டிற்கு கொஞ்சம் ஓய்வளித்தேன். டைனிங் டேபிளில் வாரப்பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருந்தாள் அவள். அவளருகே ஒரு சேரை இழுத்துப்போட்டு நானும் உட்கார்ந்தேன்..

கொஞ்ச நாளா எதாவது மனசுக்குள்ள வச்சிட்டு குழப்பிகிட்டு இருக்கியா? நான் கேட்டேன்..

இல்லையே .. அப்படிலாம் ஒன்னுமில்லையே.. நிமிர்ந்து ஆச்சரிய பார்வையோடு பதிலளித்தாள்..

அப்ப உடம்புக்கு ஏதும் சரி இல்லையா?? நெற்றியில் கை வைத்துக் கேட்டேன்..

இல்லயே.. நல்லா இருக்கேனே.. என்னாச்சு உனக்கு?? பத்திரிக்கையை மூடி வைத்துக் கேட்டாள்..

இல்ல.. கொஞ்ச நாளா நீ டையார்டா இருக்குற மாதிரி தோணுச்சி.. அதான் கேட்டேன்.. ஒண்ணுமில்லணா ஓகே தான்.. ரெஸ்ட் எடு.. என்றேன்..

ம்ம்.. ஆமா இல்ல.. நானும் கொஞ்சம் ஃபீல் பண்ணுனேன்.. டையார்டா தான் இருக்கு.. நாளும் தள்ளிப் போச்சு.. ஒருவேளை நீ அப்பாவாக போறியோ??

என்ன.. அப்பாவாகவா???! கொஞ்சம் வேகமாக துடிப்பது போலிருந்தது இதயம்.. எவ்வளவு சாதாரணமாக கேட்கிறாள்..

ஹே என்ன சொல்ற.. நிஜமாவா?? உற்சாகமானேன்..

ஆமா பா.. நா கன்ஃபர்ம் பண்ணிட்டு சொல்லலாம் நெனச்சேன்.. நீங்க தான் உன் சின்ன அசைவு கூட உன் கண்ணுலேயே தெரியுதுனு எல்லாத்தையும் ஈசியா கண்டு பிடிச்சிற.. டாக்டர் கிட்ட போய் செக்பண்ணிக்கலாமா பா? கொஞ்சலாய் கேட்டாள்.

இப்பவே போகலாம்.. காரில் கிளம்பினோம்.

அரை மணி நேரம் ஆகும்.. வெயிட் பண்ணுங்க என்று சொன்னார்கள்.. கடிகாரம் மெதுவாய் நகர்வது போல் இருந்தது.. ஒருவருக்கொருவர் காத்திருந்த நேரம் கூட இவ்வளவு மெதுவாக நேரம் நகர்ந்தது போல் நினைவில்லை.. கைவிரல்களை கோர்த்து அமர்ந்திருந்தாள்.. எக்ஸைடடா இருக்கா?? மெதுவாய் கேட்டாள்.. நிறையவே.. நானும் மெதுவாய் பதிலளித்தேன்...

முடிவே செய்து விட்டாள் போலும்.. ஒரு வேளை எதிர்பார்த்தது போல் இல்லையென்றால் தாங்கிக் கொள்வாளா? பாவம் எவ்வளவு நாள் இதை நினைத்துக் கொண்டிருந்தாளோ தெரியவில்லையே..

குழந்தை என்றொரு ஆனந்தம் வரப்போகிறது என்பதை விட அவள் வருந்தும்படி எதாவது நடந்து விடுமோ என்ற பயம் தான் அதிகம் எனக்கிருந்தது.. உள்ளே அழைத்தார்கள்..

உலகில் எத்தனை தெய்வங்கள் உண்டோ தெரியாது.. ஆனால் அத்தனை பேரையும் வேண்டிக் கொண்டேன்.. அவளை ஏமாற்றி விடாதே என்று..

ரிசல்ட் எங்களுக்கு சாதகமாய் தான் இருந்தது.. டாக்டர் அறையில் இருவரும் கைகளை இறுக பற்றிக் கொண்டு தான் அமர்ந்திருந்தோம்.. டாக்டர் சொல்வதைக் கேட்க கேட்க கைகளில் இறுக்கமும் எங்களுக்குள் நெருக்கமும் கூடிக்கொண்டே போனது..

எங்கயாவது வெளிய போயிட்டு வீட்டுக்கு போகலாமா?? எனக்கு முன் முந்திக் கொண்டாள். நானும் அதையே கேட்க நினைத்தேன். ஈசிஆர் பீச் பக்கம் கார் சென்றது..

எங்களுக்கு பிடித்த இடம்.. அவள் கண்களில் அத்தனை ஆனந்தம்.. என் கண்களிலும் அதையே அவளும் பார்த்திருப்பாள்..

கைகளை கோர்த்துக் கொண்டே நடந்தோம்.. மயங்கிப் போகும் மாலைப்பொழுதில் வானம் இன்னும் வண்ணமாய் தெரிந்தது.. அருகில் இருந்த வீட்டின் கோட்டை சுவற்றில் தொட்டியில் பூத்திருந்த ஒற்றை ரோஜா அவ்வளவு அழகாய் இருந்தது.. இல்லாத வானவில் இருவர் கண்ணுக்கும் தெரிந்தது.. மழை நேர வெயில் வண்ணமயமாய் தெரிந்தது.. கைகள் கோர்த்து நடக்கும் ஒவ்வொரு நொடியும் இவ்வளவு பெரிய இந்த உலகம் சுருங்கி எங்களுக்கான சின்ன உலகமாய் மாறி நாங்கள் இருவரும் மட்டுமே உள்ளது போல, யாருக்குமே இல்லாத மகிழ்ச்சி எங்களுக்கு மட்டுமே உள்ளது போல பிரமை தோன்றியது..

வழக்கம் போல கோவிலுக்குச் சென்றோம்.. கால்கள் தானே சென்றது என்று தான் சொல்ல வேண்டும்.. கடவுளை வணங்கி நான் வழக்கம் போல கடைசி தூணின் கீழ் அமர, பிரகாரத்தை சுற்றி வந்தாள்.. அருகில் அமர்ந்து என் நெற்றியில் மெல்லிய விரலால் ஒரு கீற்று இட்டு, பின் கைகளை குவித்து மெதுவாய் ஊதி விட்டாள்.. ஒரு நாளும் நான் என் நெற்றியில் திருநீறு இட்டதில்லை.. அவள் இட்டு விட வேண்டும் என்பதற்காகவே.. அவ்வளவு அழகாய் இருக்கும்..

வெளியே வந்தோம்.. கொஞ்சம் மல்லிகை.. கொஞ்சம் பிச்சிப்பூ.. அவளுக்கு பிடித்த மாதிரி.. பூக்கடைக்காரியிடம் வாங்கினேன்.. என்னை வைத்து விடச் சொன்னாள்..

கொஞ்சம் தள்ளி சர்ச் இருந்தது.. வழக்கமாய் அங்கேயும் செல்வோம்.. இன்றைக்கும்.. எப்போதும் இரண்டு மெழுகுவர்த்திகள் வாங்கி வைப்பாள்.. இன்றைக்கு மூன்று.. எனக்கு அர்த்தம் புரிந்தது.. புன்னகைத்துக் கொண்டேன்..

வெளியே வந்த பின் கேட்டேன்.. உனக்கு எந்த கடவுள் மேல நம்பிக்கை அதிகம்..? கோவிலுக்கும் போற.. சர்ச்க்கும் போற..?

நிதானமாக பதிலளித்தாள்.. எந்த கடவுள் மேல நம்பிக்கை வைக்குறோம்னு இல்ல.. எவ்வளவு நம்பிக்கை வைக்றோம்னு தான் முக்கியம்.. யோசிச்சி பாரு.. நம்ம ரெண்டு பேருக்கும் எப்பவாது இது தான் காதல், இவ்வளவு தான் காதல் னு தோணுச்சினா அதுக்கு மேல காதலிக்க முடியுமா.. அப்படி தான் கடவுளும்.. இது தான் கடவுள், இவ்வளவு தான் கடவுள் னு நினைச்சிட்டா அதுக்கு மேல நம்பிக்கை இல்லாம போய்டும்.. கடவுள் கோவில் சர்ச் ல இல்ல.. கடவுள்னு ஒரு சக்தி இருக்குங்கற நம்பிக்கை தான் கோவிலையும் சர்ச்லையும் இருக்கு... நானும் அங்க போய், ஆமா கடவுள் னு ஒருத்தர் இருக்கார்ங்கற நம்பிக்கைய அங்க வர மக்களுக்கு கொடுத்துட்டு வரேன்.. அவ்வளவு தான்..

அவள் வேதாந்தங்கள் எனக்கு அவ்வளவு எளிதாய் புரிந்து விடுவதில்லை.. சத்தியமா ஒன்னும் புரியல.. ஆனா நீ என்ன சொன்னாலும் அதோட அர்த்தம் அழகா இருக்கு.. உன்ன மாதிரியே.. புன்னகைத்துக் கொண்டேன்..

கடற்கரை மணலில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்து கொண்டோம்.. பேசிக் கொள்ளவில்லை.. நேரம் போனதே தெரியாமல் சற்று இருட்டிய பின் கிளம்பினோம்..

கோர்த்துக் கொண்ட கைகளை விடவேயில்லை.. காரில் கியர் மீது என் கைகளை வைத்துக் கொள்ள, என் கை மீது கை பதித்துக் கொண்டாள்.. மிதமான வேகத்துடன் சென்று கொண்டிருக்க சொல்லி வைத்தாற்போல் வானொலியில் எங்கள் இருவருக்கும் பிடித்த பாடல்..

பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே.. பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே.. காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே.. வாசனை திரும்பியதில் உனக்கென கோபமே... விதியென்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்.. நதி வழி போகின்றோம்.. எந்தக் கரை சேர்கின்றோம்..

வரிகளை முணுமுணுத்துக்கொண்டே என் மீது சாய்ந்திருந்தாள்.. அவள் கண்களை பார்த்து போது தோன்றியது.. இது தான் காதல் என்று எந்த இடத்திலும் நின்று விடவே முடியாது.. மீண்டும் மீண்டும் காதலில் விழுந்து கொண்டே தான் இருக்க முடியும்..

இதை விட அவளுக்கு இன்னும் பிடித்த பாடல் ஒன்று உண்டு... என்னைத் தான் அன்பே மறந்தாயோ! என்ற வரிகள் வரும் போது அவள் கண்களை பார்க்க வேண்டுமே.. மறப்பேன் என்றே நினைத்தாயோ! என்று பதில் தராமல் என் பார்வையை திருப்பிக் கொள்ளவே முடியாது.. அத்தனையும் காதல்..

காலையில் மீந்திருந்த இரண்டு இட்லிகளை ஆளுக்கொன்றாய் ஊட்டி விட்டு இரவுணவை முடித்துக் கொண்டோம்.. பசிக்கவே இல்லை.. மனம் முழுதாய் நிறைந்திருந்தது..

-------------------------------------------------------------------------------------------------

பதட்டத்தில் கோர்த்திருந்த கைகள், பரவசத்தில் கோர்த்திருந்த கைகள், பதட்டத்திலும் பரவசத்திலும் உனக்காய் நான் இருக்கிறேன் என்று பரிமாறிக் கொண்ட உணர்வு, நெற்றியில் திருநீறு இட்ட போது, தலையில் பூக்கள் சூடிக் கொண்ட போது, மெழுகுவர்த்திகளை அவள் பிடிக்க நான் பற்ற வைத்த போது, தோள் சாய்ந்து மௌனமாய் பேசிக்கொண்ட போது, சிறிது உணவென்றாலும் அவள் உண்ணட்டும் என்று நானும், நான் உண்ணட்டும் என்று அவளும் பசிக்கவே இல்லை என்ற போது, உண்ணாது விடுவாளோ என ஒவ்வொரு விள்ளலும் ஊட்டி விட்ட போது, ஒவ்வொரு தருணங்களிலும் எங்களை தழுவிக் கொண்டது காதல்..

நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என்று நாம் அளவிட முடிவதில்லை காதல்.. வாழும் ஒவ்வொரு நொடியிலும், தருணங்களிலும் புதியது போல மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டே இருப்பது தான் காதல்..

எல்லாரையும் போல அந்த தருணங்களை ஓடி கடந்து விட நாங்கள் விரும்பியது இல்லை.. நின்று, நிதானமாக அந்த நொடியை வாழ்ந்து, காதலை உணர்ந்து, அனுபவித்து வாழவே விரும்பினோம்.. அப்படி ஒவ்வொரு நொடியைக் கூட விடாமல் காதல் செய்யும் விதத்தைநீயும் கற்றுக் கொள்ள விரும்புகிறோம்..

எங்கள் இருவருக்கும் எல்லாம் ஒத்துப் போகிறது.. ஒரே மாதிரி சிந்திக்கிறோம்.. அதனால் தான் இப்படி வாழ முடிகிறது என்று பலர் சொல்லியிருக்கிறார்கள்.. உண்மை அதுவல்ல.. எங்களுக்குள்ளும் நிறைய வாக்குவாதம் இருந்திருக்கிறது.. சண்டைகள் இருந்திருக்கிறது.. இப்போதும் எனக்குப் பிடித்து அவளுக்குப் பிடிக்காத விஷயங்கள், அவளுக்குப் பிடித்து எனக்குப் பிடிக்காத விஷயங்கள் இருக்கிறது.. வேறுபாடே இல்லாமல் யாரும் இருக்க முடியாது.. ஆனால் அந்த வேறுபாடுகளை புரிதல், கொஞ்சம் விட்டுத் தருதல், ஒருவர் மற்றவருக்கு அவருக்கான இடம் தருதல் என்றே இருந்தால் காதல் ஏன் குறைய போகிறது..

சண்டை பிடிக்கும் தருணங்களில், கண்ணால் பேசும் பெண்ணே, எனை மன்னிப்பாயா! என்றும், கோபம் கொண்ட தருணங்களில்     கண்ணாடியில் அவள் முகம் தெரியும்படி வைத்து, கண்ணாடியில் உள்ள உருவத்தை சமாதானம் செய்தும், கோபத்தில் உண்ண மறுக்கும் தருணங்களில் மின்னும் சிலையே.. அன்னை போல் வரவா நானும் சோறூட்ட.. உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னைச் சீராட்ட.. என்றும் பாட்டுப் பாடியும் என் மன்னிப்பையும் காதலையும் சேர்த்தே கொடுத்திருக்கிறேன்..

பல நேரங்களில் அவளும் கண்ணா.. கலக்கமா.. நெஞ்சில் வருத்தமா.. கண்ணீர் இனி ஏனம்மா.. இனி மேல் நான் தான் அம்மா.. என்றும், 108 முறை ஸ்ரீஇராமஜெயம் போல மன்னித்து விடு என்று ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதிக் கொடுத்ததும் நடந்திருக்கிறது..

சின்ன விஷயங்கள் தான்.. ஐ ஆம் சாரி.. என்று ஒரே வரியில் முடித்திருக்கலாம்.. ஆனாலும் இருவருமே சண்டைகளிலும், கோபங்களிலும், வாதங்களிலும் கூட காதலையே தேடினோம்.. தருணங்கள் தானே உருவாகும் என்று காத்திருப்பதை விட கிடைப்பதை எல்லாம் நல்ல தருணங்களாக மாற்றிக் கொண்டு வாழ பழகிக் கொள்..

நான் பெரியவன் என்றோ, பெரியவள் என்றோ நினைக்காமல் ஒருவருக்காக மற்றொருவர் என்று வாழ பழகுங்கள்.. எனது உடைகளை தேய்த்துக் கொடுப்பதிலும், காலனிகளுக்கு பாலிஷ் போட்டுத் தருவதும், வெளியே செல்லும் போது தலை சீவி விடுவதும், தூங்கிய பின் போர்த்தி விடுவதும், எத்தனை முறை கேட்டாலும் ஊட்டி விடுவதும், விட்டதும், சேலை மடிப்புகளை சரி செய்வதும், அவள் காலனிகளை மாடி விடுவதும், கைப்பையை நான் சுமப்பதும், நெற்றியில் குங்குமம் இடுவதும், அவள் டூத்ப்ரஷை மாதம் ஒரு முறை நான் மாற்றி வைப்பதும், அவளுக்கு சமைத்துக் கொடுப்பதும், அன்றாட விஷயம் என்றோ, சாதாரண விஷயங்கள் என்றோ, சின்ன விஷயங்கள் என்றோ கடந்து விடுவதில்லை.. ஒவ்வொரு முறையும் அதே காதலோடும் உற்சாகத்தோடும் தான் செய்கிறோம்..

காலத்தின் ஓட்டத்தில் நாமும் ஓடிக் கொண்டு, வாழ்க்கைக்கென வேலைக்கும் பணத்திற்கும் ஓடிக் கொண்டு நம் அருகிலேயே இருக்கும் அழகான வாழ்க்கையை மறந்து விடுகிறோம்.. ஓடிக் கொண்டே முடிந்து விடுவதில்லை வாழ்க்கை.. நாம் நிற்கும் போது, கடந்து வந்த பாதையில் எதையுமே கண்டுகொள்ளாமல் வந்திருந்து, பின்னர் வருந்தி பலனில்லை.. இப்போது வாழும், கடக்கும் இந்த நொடியை வாழ்வதற்கு கற்றுக் கொள்..

சொல்லித் தெரிவதில்லை காதல்.. அது உணர்ந்து கொள்வது.. நீயும் உணருவாய் - அதை உணர்ந்து கொள்ள விரும்பினால்..

இன்னும் பல தருணங்களை பிறிதொரு நாள் பகிர்ந்து கொள்கிறேன்..

மற்றவை உன் மடல் கண்டு.. எங்களின் இருவரின் அன்பும், காதலும், ஆசீர்வாதங்களும் உனக்கு என்றும் உண்டு..

                                     அன்புடன், அப்பா & அம்மா..

No comments:

Post a Comment