Sunday, January 14, 2018

பொங்கல் வாழ்த்துக்கள்..


விடிகாலை வேளை நீ எழுவதற்கென காத்திருந்தது..
என் உறக்கம் கெடக்கூடாதென்று
மெதுவாய் மெத்தை கலைத்துநீ சென்றாலும்
உன் கொலுசொலிகளின் மெல்லிசை எழுப்பிவிட்டது
என்னையும் காலைகண்விழிக்கும் பறவைகளையும்..
நீ சுற்றி வர, துளசிமாடம்
புண்ணியங்கள் சேர்த்துக் கொள்கிறது..
வாசல் தெளித்து கோலம் போடும் உன் முகம்கண்டு
வானமென்னும் மேனியெங்கும்
வெட்கங்கொண்டு சிவந்தான் சூரியன் - விடிந்தது...
மாக்கோலம் உணவுகொள்ள வந்த எறும்புக்கூட்டம்
உன் விரல்கள் மொய்க்க விரைந்தன..
வளையோசை வரும் இன்னிசை கேட்டு
நடனமாடியது நீ பற்ற வைத்த நெருப்பு..
புத்தரிசி களைந்த போது நீரெல்லாம்
உன் கைவிரல்கள் முத்தமிட்டு விடை பெற்றன..
புதுப்பானை பொங்கல் விரைந்தே பொங்கியது
உன் புன்சிரிப்பு இதழோரம் பொங்கிவரக் காண..
வானம் பார்த்து பூமி பார்த்து நீ வணங்கும்போது
உன்விழி தரிசித்து உன்நன்றி ஏற்றன அவையிரண்டும்...
உழவனும் இயற்கையும் உயர்வுபெற வேண்டுமென்ற
உன் வேண்டுதலும் ஏற்றான் இறைவன்..
உன் வேண்டல் முடிந்து என் வேண்டல் கேட்டு
கையில் உருட்டி நீ ஊட்டிய போது தான்
அப்பொங்கலும் இனிப்பு பெற்றுக் கொண்டது..
கரும்பும் தித்திப்புக் கூடியது..
அன்பென்னும் வாசம்வரும் உன் பாதம்படும்
இடமெல்லாம் என் வீட்டில்.. என்ற போது
எந்நாளும் தித்திக்கும் வாழ்நாளும்.. எனில்

ஒவ்வோர் நாளும் தித்திக்கும் தைப்பொங்கல் தானே எனக்கு..!

No comments:

Post a Comment