Saturday, December 20, 2014

எழுத நினைத்த கவிதை

ஒற்றை வரியில் கவிதை கேட்கும்
உன்னிடம்.. நான் நீட்டும் 
வெற்று காகிதத்தில்
உன் பெயரிருக்கும் - என்றெண்ணிப் 
பிரித்துப் பார்க்கும்
உன் பார்வை – என் கவிதையின் முதல் வரி..
ஏமாற்றமென உன் விழியின் மாற்றம்
சொல்லுமென் கவிதையின் அடுத்த வரி...




காதல் தின கதை

ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அந்த ஊரில் ஏதேனும் திருமணம் நிகழ்ந்தால் தன் அம்மாவிடம் சென்று “எனக்கு எப்போ கல்யாணம் நடக்கும்?” எனக் கேட்பான். அம்மாவும், “உன்னை தேடி ஒரு தேவதை வருவா. அவ கூட உனக்கு கல்யாணம் நடக்கும்.” என்பாள். 
“தேவதை எப்படிம்மா இருப்பாள்?” என்று கேட்கும் மகனிடம் “உலகத்துலேயே அவள் மாதிரி அழகான பொண்ணு யாரும் இருக்க மாட்டாங்க. உன்ன நல்ல பார்த்துக்குவா. ரொம்ப அன்பா இருப்பா.” என்று ஏதாவது சமாதானம் சொல்வாள். அன்றிலிருந்து பல்வேறு கற்பனையோடு தேவதையை எதிர்நோக்கி இருந்தான்.
நாட்கள் சென்றன. சிறுவனும் வளர்ந்து திருமண வயதை அடைந்தான். பலர் பெண் கொடுக்க வந்த போதும், “என்னை தேடி தேவதை வருவா. இவர்கள் யாரும் வேண்டாம்.” என்று நிராகரிப்பன். ஒரு நாள் இரவு காட்டு வழியே பயணம் சென்று கொண்டிருந்தான். 
திருடர்கள் சிலர் துரத்தியதில் இருட்டில் ஒரு குகையில் ஒளிந்து கொண்டான். அந்த குகையில் பேய் இருப்பதாக ஒரு வதந்தி இருந்தது. எனவே திருடர்கள் சென்று விட்டனர். குகையில் தூங்கி எழுந்தவனுக்கு காலையில் அதிர்ச்சி. அங்கே ஒரு பெண் இருந்தாள். சற்று அவலட்சணமான உருவம். பேய் என பயந்தான். புரிந்து கொண்ட அவள் தன்னை பார்த்து பயப வேடம் என சைகை செய்தாள். அவளால் பேச முடியாது என தெரிந்து கொண்டான். வீட்டை நோக்கி செல்ல தொடங்கிய அவனுடன் அவளும் வந்தாள். அம்மாவிடம் சென்று நடந்ததை கூறினான். மரண படுக்கையில் இருந்த அவள் அம்மா, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி விட்டு இறந்து விட்டாள். தேவதையை எதிர்பார்த்து இருந்தவனுக்கோ ஏமாற்றம். அம்மாவின் இறுதி ஆசை என திருமணமும் செய்து கொண்டான்.
ஆனாலும் அவளிடம் பேச மாட்டான். அவளோ அவனை மிகவும் அதிகமாய் நேசித்தாள். அவனுடைய அனைத்து வேலைகளையும் அவனே செய்வாள். சமைப்பது, துணி துவைப்பது, வீடு, தோட்டம் சுத்தம் செய்வது என அனைத்து வேலைகளையும் தனியே செய்வாள். ஒரு நாள் கீழே விழுந்து அவன் கால்கள் உடைந்து விட்டன. சற்றும் முகம் கோணாது அவனை அப்படி கவனித்துக் கொண்டாள். 
அவளது அன்பைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போனான். ஆனாலும் தேவதை, ஏமாற்றம் என ஒரு கோபம். அவளிடம் சரிவர பேசக்கூட மாட்டான். நாட்கள் சென்றன. இருவருக்கும் வயதாகிப் போனது.
அவள் மரண படுக்கையில் இருந்தாள். எதையும் எதிர்பார்க்காமல் இத்தனை நாள் தன்னை நேசித்த அவளிடம் இப்போதும் எதுவும் சொல்லவில்லை என்றால் அது தான் பாவம் என்று எண்ணி அவளிடம் பேசினான். “உன்னை மாதிரி என்னை நேசித்தவர்கள் யாரும் இல்லை. தோற்றதிலோ அழகிலோ எதுவும் இல்லை. அன்பில் தான் எல்லாம் இருக்கிறது. நானும் உன்னை அதிகமாய் நேசிக்கிறேன். ஏதோ ஒரு வறட்டு கெளரவம் (ஈகோ) பார்த்து உன்னிடம் பேசக்கூட இல்லை. என்னை மன்னித்து விடு.” என்றான். மிகவும் கஷ்டப்பட்டு புன்னகைத்தாள். இத்தனை வருடத்தில் அவள் புன்னகை செய்ய முதன்முதலில் பார்க்கிறான்.
அப்போது ஒரு அதிசயம். அவள் ஒரு அழகிய தேவதையாக மாறினாள். என் அழகின் மீது கர்வம் கொண்டதால் எனக்கு சாபம் கொடுத்து அனுப்பி விட்டார் கடவுள். “உன் அழகை காணாமல், அவலட்சணமான தோற்றத்தை நேசித்து, அன்பினால் முதன் முதலில் புன்னகை செய்வாயோ அன்று மீண்டும் உன் அழகை பெறுவாய். பூமியின் வாழ்க்கை முடிந்த பின் சொர்க்கம் திரும்புவாய்” என கடவுள் சொன்னதாக சொன்னாள்.
அழகு தோற்றம் கிடைத்து விட்டது. பூமியில் வாழ்கையும் முடியும் தருணம் வந்து விட்டது என்று சொல்லி விடை பெற்றாள்.
இத்தனை நாள் இந்த தேவதை என்று தெரியாமல் வாழ்கையை வீணடித்து விட்டதை உணர்ந்தான்.....
------ நம்மில் பலரும் இப்படிதான். நம் அருகில், நம்மை நேசித்து, நமக்காய் வாழும் மனைவியை விட்டு விட்டு, எதிர்பார்த்த ஏதோ ஒன்று இல்லையென்ற ஈகோவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதை தூக்கிப் போட்டு விட்டு அன்பையும் காதலையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அந்த தேவதையை இறுதி வரை பார்க்காமலே போய் விட வாய்ப்புகள் உண்டு..... இனிய காதல்.. காதலர் தின வாழ்த்துக்கள்.....