முன்னொரு காலத்தில் ஒரு காட்டுபகுதியில், ஓர் சிறிய
வீட்டில் லவ்லி என்றொரு சிறுமி வாழ்ந்து வந்தாள். மிகவும் இனிமையான குணம் கொண்ட
லவ்லிக்கு சொந்தம் என்று யாரும் இல்லையெனினும் காட்டு விலங்குகள், மரம் செடிகள்,
பறவைகள் என பல நண்பர்கள் இருந்தனர்.
மரம் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, அடிபட்ட
விலங்குகளுக்கு உதவி செய்வது, தனிமையாய் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளிடம்
பேசுவது என தன்னால் முடிந்த நற்செயல்களை எப்போதும் செய்து வந்தாள். தினமும் காட்டு
பகுதியை தாண்டி பள்ளிகூடத்திற்கு சென்று வருவாள். காலையில் செல்லும் போது கண்ணில்
படும் மரம் செடி கொடி, பறவை விலங்குகளிடம் நலம் விசாரிப்பாள். ஒவ்வொன்றிற்கும்
பெயர் வேறு வைத்து அழைப்பாள்.
“ஜீபா, நல்லா இருக்கீங்களா? நல்லா தூங்குனிங்களா? கெவின்
குட்டி எப்படி இருக்கான்? காற்று வேகமா அடிச்சாலும் நீங்க அசையாதீயங்க, கெவின்
குட்டி பயந்துடுவான்.” என ஆலமரத்திடம் சிட்டுக் குருவியின் குஞ்சுகளைக் கூட
விசாரிப்பாள்.
மாலை வரும் போது அரட்டைகளும் விளையாட்டுகளும்
மிகுந்திருக்கும். முயல் குட்டிகளும் மான் குட்டிகளும் அவளோடு துள்ளி விளையாடும்.
தானும் மகிழ்ச்சியாக, தன்னை சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தாள்
லவ்லி என்ற அந்தச் சிறுமி.
லவ்லியின் வீட்டைச்சுற்றி அழகான தோட்டம்
அமைத்திருந்தாள். மாலை மற்றும் விடுமுறை நேரங்களில் அவற்றை பராமரிப்பாள். களை
எடுப்பது, நீர் பாய்ச்சுவது என அனைத்தையும் அவளே செய்வாள்.
“நீங்க நல்லா வளரனும். உங்கள நான் நல்லா
பார்த்துக்குவேன்.” என இரவு நேரங்களில் அந்த செடிகளோடும் பூக்களோடும் பேசிக்கொண்டிருப்பாள்.
அந்த செடிகளில் பூக்கும் பூக்கள் மிக அழகாய் இருந்தன. காட்டு பகுதியில் வேறெங்கும்
அப்படிப்பட்ட பூக்கள் கிடைப்பதில்லை. பல்வேறு நிறங்களில் மிக அழகாய் சிரித்துக் கொண்டு இருக்கும்.
தினம் பள்ளிக்கு செல்லும் போது கூடை நிறைய பூக்களை
எடுத்து செல்வாள்.
பள்ளிலுள்ள சர்ச்க்கு பூக்கள் அளிப்பாள். சர்ச் பாதர்
புன்னகையோடு அதை பெற்று கொண்டு அவளை ஆசிர்வதிப்பார். பள்ளியிலுள்ள ஆசிரியர்கள்
மற்றும் கூட படிப்பவர்களுக்கும் கூட பூக்களை பகிர்ந்து கொள்வாள். வேறெங்குமே
கிடைக்காத அழகான பூக்கள் என்பாதால் எல்லோரும் அதை மகிழ்ச்சியாக பெற்று
கொள்வார்கள். அன்பாய் கொடுக்கும் மலர்கள், அக்கறையான பேச்சு என பள்ளியிலும்
லவ்லியை அனைவருக்கும் பிடித்திருந்தது.
ஒரு நாள் மாலை பள்ளி
முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். புதிதாய் பிறந்த குட்டியோடு விளையாடிக்
கொண்டிருந்தது ஒரு யானை.
“ஹலோ டீனா! குட்டி எப்ப
வந்தாங்க? ரொம்ப அழகா இருக்காங்க.” என விசாரித்தாள் லவ்லி.
“நேற்று ராத்திரி தான்
பிறந்தாள். உன்கிட்ட சொல்றதுக்காக தான் காத்திட்டு இருந்தோம்.” என்றாள் டீனா என்ற
தாய் யானை.
“ரொம்ப அழகா இருகாங்க. நா
இனிமே உங்கள ‘டியாலா’னு கூப்பிடுவேன்” என்று சொல்லிவிட்டு தாய் யானையிடம், “இந்த
ஞாயிற்றுக்கிழமை நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கண்டிப்பா வரணும்.” என அழைப்பு
விடுத்துச்சென்றாள்.
ஞாயிற்றுக்கிழமையும்
வந்தது. யானையார் நிறைய சாப்பிடுவாங்க என எண்ணிக்கொண்டு நிறைய பழங்கள், இலை தழைகளை
காட்டினுள் சென்று சேகரித்தாள் லவ்லி. வீட்டிற்க்கு வந்து பார்த்தால் அதிர்ச்சி.
வீட்டைச் சுற்றியுள்ள பூந்தோட்டம் சிதைந்திருந்தது.
“நான் எவ்வளவோ தடுத்துப்
பார்த்தேன். பிறந்த குட்டிக்கு எதுவும் தெரியவில்லை. அங்கயும் இங்கயும் ஓடி
அத்தனையும் பாழாய் போய்விட்டது. என்னை மன்னித்து விடு லவ்லி.” என்றது தாய் யானை.
ஒரு செடி மிச்சமில்லாமல்
அத்தனையும் அழிந்திருந்தது. “பரவாயில்லை, டியாலா தெரியாம தானே பண்ணினாங்க.” என்ற
லவ்லியின் குரலில் அழுகை தெரிந்தது. வீட்டிற்குள் சென்று அழ தொடங்கினாள்.
வீட்டை விட்டு வெளியே
வரவில்லை. சோகமாக வீட்டிற்குள்ளேயே பல நாட்கள் இருந்தாள். அவளைக் காணாது
வனத்திலுள்ள மரங்கள், விலங்குகள் பறவைகள் வருந்தின. முயல் குட்டிகளும், மான்
குட்டிகளும் அவளை வெளியே அழைத்தன. ஆனால் அவள் வரவில்லை. தான் மிகவும் நேசித்த
பூந்தோட்டம் அழிந்து போனதையே நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள்.
கலைந்து போன கேசம், சோகம்
நிறைந்த முகம் என லவ்லியின் தோற்றமே மாறியிருந்தது. நேரத்திற்கு உண்பதும்
உறங்குவதும் கூட இல்லை. இப்படியே ஒரு மாதம் கடந்தது. மிகவும் சோர்வாய் இருந்த
லவ்லி படுத்திருந்த கட்டில் அருகே ஜன்னல் ஒன்று இருந்தது. அதன் வழியே வெளியே
பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அருகில் உள்ள மரம் ஒன்றில்
ஓர் மரம்கொத்தி பறவை தினம் வந்து கொத்திக் கொண்டிருக்கும். வேகமாக கொத்திக் கொண்டு
இருக்கும் போது ஒரு நாள் அதன் அலகு உடைந்துவிட்டது. ஆனாலும் அடுத்த நாள் அதே
மரத்தில் மீண்டும் கொத்திக் கொண்டிருந்தது அந்தப் பறவை. இதையெல்லாம் கவனித்துக்
கொண்டிருந்த லவ்லி அந்த பறவையிடம் கேட்டாள்.
“அலகு உடைந்தும் ஏன்
மீண்டும் கொத்துகிறாய்? மீண்டும் அலகு உடைந்தால் என்ன செய்வாய்?” எனக் கேட்டாள் லவ்லி.
“அலகு உடைந்து விட்டது என
நானும் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கலாம். அல்லது உடைந்து விடுமோ என்று பயந்து
உட்கார்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அது எனக்கோ என் குடும்பத்திற்கோ மகிழ்ச்சியை
கொண்டு வராது. என் உழைப்பும் முயற்சியும் தான் மகிழ்வை தரும். என்ன நடந்தாலும் அதை
நான் விட போறதில்லை. முடிவுகள் எதுவாக இருந்தாலும் சரி. உன்னைப் போல நானும் மாதக்கணக்கில்
அழுது கொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? நானும் என்னைச் சுற்றியுள்ள அனைவரும்
மகிழ்ச்சியாய் இருக்க வேண்டிய தருணங்களை இழந்திருப்போம்.” என்றது பறவை.
“ஆனால் என் சந்தோசத்தை நான்
இழந்து விட்டேன். இதற்கு மேல் வாழ்க்கையில் என்ன இருக்கிறது. நான் எப்படி நானும்
மகிழ்ச்சியாக, என்னைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது?” என வருத்தம்
நிறைந்த குரலில் சொன்னாள் லவ்லி.
“மீண்டும் மகிழ்ச்சி வர நீ
என்ன முயற்சி செய்தாய் சொல்? அந்த அழகான தோட்டத்தை உருவாக்கியவள் நீ. மீண்டும் அதை
உருவாக்கலாமே?” எனக் கேட்டது பறவை.
“மீண்டும் பூக்கள்
பூக்கவில்லையென்றால் என்ன செய்வது? அல்லது பூத்த பிறகு மீண்டும் யாரவது அழித்து
விட்டால் என்ன செய்வது?” என சந்தேகம் கேட்டாள் லவ்லி.
“முயற்சியே செய்யாமல்
முடிவுகளை நீயே எண்ணிக் கொள்வது தான் முட்டாள்தனம். குறைகள் இல்லாதவர்கள் யாருமே
இல்லை. மீண்டும் தவறுகள் நிகழ்ந்தாலும் திருத்திக்கொள்ளலாம். மகிழ்வோடு
வாழ்ந்திருக்க வேண்டிய தருணங்களை தவற விட்டு வருந்திக் கொண்டிருப்பது சரியா?
அல்லது புது முயற்சிகள், புது அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு முயற்சியைக் கைவிடாமல்
மகிழ்வாய் வாழ்வது சரியா?” எனக் கேட்டுக் கொண்டு பறந்து சென்றது அந்த பறவை.
ஒரு மாதத்தில் மீண்டும்
பூக்கள் பூத்திருந்தது லவ்லியின் தோட்டத்தில்..
நீதி: முடிந்தவைகளை எண்ணிக் கொண்டு வருந்தியும், வரப் போகும்
முடிவுகளை எண்ணிக்கொண்டு பயந்தும் வாழாமல், வாழ்வின் இந்த நொடியின் மகிழ்ச்சியை தொலைத்து
விடாமல் வாழுங்கள். முயற்சிகள் மட்டும் என்றும் தொடரட்டும்.


No comments:
Post a Comment